புதுடெல்லி: நாட்டின் முதன்மை மற்றும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தன் கணக்கில், ரூ.76 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வராக்கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், ஒரு தனியார் செய்திச் சேனல் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலின் மூலம் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
மேற்கூறிய தொகை, இந்த 2019ம் ஆண்டின் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாம். இந்தத் தொகை, ரூ.100 கோடிக்கு மேல் கடன் வாங்கப்பட்டிருந்த 220 வங்கிக் கணக்குகளுக்கு உரியவை என்று கூறப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியைப் போலவே, நீரவ் மோடி சம்பந்தப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியும், குறிப்பிட்ட காலகட்டத்தில், ரூ.27000 கோடி மதிப்பிலான வராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. ரூ.100 கோடிகளுக்கு மேல் கடன் வாங்கப்பட்ட 94 வங்கிக் கணக்குகளுக்கு உரியவை அந்தத் தொகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.