டெல்லி: சில ரூபாய் நோட்டுகளில் நட்சத்திர குறியீடுகள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்றும், செல்லாது என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், நட்சத்தி குறியீடு உள்ள ரூபாய் நோட்டு செல்லும் என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
கடந்த சில நாட்களாக, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களில் நட்சத்திர குறியீடு இடம்பெற்றுள்ளது தொடர்பாக சமூக ஊடங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவின. இந்த நோட்டுகள் கள்ள நோட்டு என்றும், செல்லுபடியாது என்றும் கூறப்பட்டது. இதனால், நட்சத்திர குறியீடு உள்ள ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதில், நட்சத்திர குறியீடு இடம்பெற்றுள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது வதந்தி, அதை நம்ப வேண்டாம் என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இது தொடா்பாக ரிசா்வ் வங்கி அளித்த விளக்கத்தில், ‘தொடா்ச்சியாக வரிசைப்படுத்தப்பட்ட 100 எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகளில் குறைபாடுடன் அச்சான நோட்டுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டின் வரிசை எண் பகுதியில் நட்சத்திர குறியீடு இடம்பெறும். ரூபாய் நோட்டின் எண் இடம்பெறும் பகுதியில் வரிசை எண்ணுக்கு முன்பு அல்லது இடையில் நட்சத்திர குறியீடு இடம்பெறாமல் வரிசை எண்ணுக்குப் பின் நட்சத்திர குறியீட்டைக் கொண்ட ரூபாய் நோட்டுகள், மற்ற சட்டப்பூா்வ ரூபாய் நோட்டுகளைப் போன்று செல்லுபடியாகும். மாற்றப்பட்ட/மறு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு என்னும் அடையாளத்துக்காக மட்டுமே நட்சத்திர குறியீடு பயன்படுத்தப்படுகிறது’ என தெளிவுபடுத்தியுள்ளது.