“நட்சத்திரத் தொகுதி அறிமுகம்” எனும் இந்தப் புதிய பகுதியில், நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தொகுதி நிலவரம் குறித்து விரிவாகக் காண்போம்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதி தற்பொழுது அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் அங்கு போட்டியிடுவதென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதே ஆகும்.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி
ஆம். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியிலும், 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், இந்த சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்போட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அதே போல் தே.மு.தி.க.வுக்கு அமைப்பு ரீதியாக அதிக பலம் உள்ளது. எனவே விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டால் பாதுகாப்பாக இருக்கும் என அவர் முடிவெடுத்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து, அதிமுக சார்பில் குமரகுருவும், திமுக சார்பில், வசந்தவேலும் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க. :
அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குமரகுரு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்தை மோப்பம் பிடித்த தி.மு.க.:
முன்னதாக, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில், உளுந்தூர்பேட்டையும் ஒன்று. எனினும், அக்கட்சி போட்டியிடவில்லை என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டால் மனிதநேய மக்கள் கட்சியால் அவரை சமாளிக்க முடியாது என கருதியே தி.மு.க. இந்த தொகுதியை அக்கட்சியிடம் இருந்து கேட்டு பெற்று உள்ளது. விஜயகாந்த் போட்டடியிடுவார் என்று தெரிந்தே தி.மு.க. அதன் வேட்பாளராக திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேலுவை களத்தில் இறக்கி உள்ளது. இந்த தேர்தலில் விஜயகாந்த்தை தங்கள் கூட்டணியில் சேர்க்க தி.மு.க. கடும் முயற்சி மேற்கொண்டது. அவருடன் ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால் விஜயகாந்தின் ஏற்க முடியாத நிபந்தனைகளால் கூட்டணி அமையவில்லை. திடீர் என்று மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். தாம் பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் விஜயகாந்த் நிராகரித்து விட்டாரே என்று தி.மு.க. தரப்பு விஜயகாந்த் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
பழம் நழுவி பாலில் விழும் என கலைஞர்
அழைத்தும் அவருக்கு டிமிக்கி கொடுத்து
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த விஜயகாந்த்.
எனவே அவரை தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கி உள்ளது. தேவைப்பட்டால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை விட பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.
எதிரும் புதிருமான விஜயகாந்த்- வக்கீல் பாலு:
நடிகன் நாடாளுவதா என்று பா.ம.க. விஜய்காந்த் மீது கடும் வெறுப்பில் இருந்து வருகின்றது. விஜயகாந்தை பாலு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையாக விமர்சித்து வந்தார். பாமக வெளியிட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் ராமமூர்த்தி அந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேமுதிக அறிவிப்புக்குப் பின், அந்த வேட்பாளருக்குப் பதிலாக வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பாலுவுக்கும் தருமபுரி இளவரசனின் மரணத்தும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வழக்கறிஞராக இளவரசனிடம் இருந்து அவருடைய மனைவி திவ்யாவை பிரித்த பெருமை இவரைச் சேரும்.
விஜயகாந்த் தான் மைக் பிடித்த இடங்களில் எல்லாம், வக்கீல் பாலுவை கடுமையாகச் சாடி வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க.வினர் தங்களுக்கு தேர்தல் பணியாற்றவில்லை எனத் தே.மு.தி.க. குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், தனியார் தொலைக்காட்சி நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பேசிய வக்கீல் பாலுவிடம், நிகழ்ச்சி நெறியாளர் கார்த்திகைச் செல்வன் “விஜயகாந்தை எதிர்த்து பாலு போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு, விஜயகாந்தை தோற்கடிக்க நட்சத்திர வேட்பாளர் தேவையில்லை. பா.ம.க.வின் தொண்டர் வேட்பாளராய் நின்றாலே போதும் என கர்வமுடன் கூறினார்.
இந்நிலையில், இப்பொழுது பா.ம.க. தமது வேட்பாளரை மாற்றியுள்ளது. பாலுவும் தம்மை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த தம் கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுவரை உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள் விவரம்:
குமரகுரு கடந்த தேர்தலில் 1,14,794 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக முஹமது யூசூப் 61286 வாக்குகள் பெற்றார்.
கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் பா.ம.க.வினரின் சவால்களை விஜயகாந்த் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார் என்பதையும், ஜி.ஆர்.வசந்தவேலு, வக்கீல் பாலு மற்றும் குமரகுரு எனும் மூன்றுத் தடைகளைத் தாண்டி கேப்டன் ஜொலிப்பாரா என்பதையும் பொருத்திருந்துப் பார்ப்போம். தமது பிரதிநிதி யார் என்பதை உளுந்தூர்பேட்டை தொகுதி மக்கள் முடிவு செய்வார்கள்.