வேலூர்: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டுவர காரணம் என்ன?  என்பது குறித்து, வேலூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டம் தொடங்கி வைக்கவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக, ரயில் மூலம் இன்று காலை வேலூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக இன்று காலை இல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் காட்பாடியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.  தொடர்ந்து, 2 நாட்களுக்குள்ளாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை சந்தித்து ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வில் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

அதேபோல் மாவட்ட விவசாயிகள் மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சந்திக்கிறார். மேலும், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விடுதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்குகிறார்.

இன்று மதியம்,  வேலூர் மாவட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2400 கோடி ரூபாய் நிதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, வேலூர் மாவட்டத்தின் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.15.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 114 வகுப்பறைக் கட்டடங்களுக்கு   அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கணியம்பாடி, பேர்ணாம்பட்டு, கீ.வ. குப்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 15 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 114 வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில்  உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,  பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டுவர காரணம் என்ன? என்பது குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், நான் சில சமயங்களில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்ததாக மாணவர்கள் உருக்கமாக கூறுவதுண்டு. இதனால் தான், மதிய உணவு திட்டத்தை போல காலை உணவு திட்டமும் கொண்டுவரப்பட்டு செயல்பட்டு வருகிறது. சில பள்ளிகளில் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் இருந்து பாடம் கற்பதை பார்த்துள்ளேன். மாணவர்களின் இந்த சிரமங்களை தவிர்க்கும் வண்ணம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.