கோவை: கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆக ஸ்டாலின் அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் பேச வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்லப்போவதாக அறிவித்தார்.
இதற்கிடையே காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து கருத்து கூறினார்.
இதையடுத்து கன்னட அமைப்பு ஒன்றின் தலைவரான வாட்டாள் நாகராஜ், “ரஜினி நடித்திருக்கும் காலா படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம்” என்றார். கன்னட திரைப்பட வர்த்தக சபையும் இதே கருத்தைக் கூறியது. சமீபத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, “கர்நாடகத்தில் காலா படம் வெளியாவதை கன்னடர்கள் விரும்பவில்லை” என்றார்.
இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கர்நாடகாகவில் காலா திரைப்படத்தை வெளியிட முடியாது என அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியிருக்கிறார். எப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை தரமுடியாது என்று கூறினார்களோ அதே போல் காலா படத்தை வெளியிட முடியாது என்கிறார்கள்.
ரஜினிக்காக நான் பேசவில்லை. ஒரு தமிழ் படத்திற்காக பேசுகிறேன். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸின் கூட்டணியில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட குமாரசாமியிடம் போனிலோ அல்லது தேவைப்பட்டால் நேரில் சென்றோ பேச வேண்டும். காலா படம் கர்நாடகாவில் வெளியாக ஸ்டாலின் உதவ வேண்டும். தமிழுக்காக திமுக எதையுமே செய்யாத நிலையில் தமிழ் படத்திற்காவது செய்யட்டும்.
இனியும் திமுக பாசாங்கு செய்யக்கூடாது. காவிரியில் நீர் திறக்க காவிரி நீரை திறக்க கர்நாடக அரசிடம் திமுக என்றுமே கோரிக்கைவிடுத்தது இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசிடம் காவிரியில் நீர் திறக்க ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்” என்றார்.
மேலும், “எஸ்.வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.
அரசுக்கு எதிராக பேசுவதில் தவறில்லை, ஆனால் புரட்சி செய்யும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். தமிழனை உயர்த்துவதாக கூறியவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள்” என்று பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
“பா.ஜ.க.வின் குரலாகவே ரஜினி பேசுகிறார். பாஜக சொல்படி செயல்படுகிறார்” என்று விமர்சனம் தொடரும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.