சென்னை:
105 வயது விவசாயி மற்றும் திமுகழகத்தின் மூத்த முன்னோடியுமான கோவை-மேட்டுப்பாளையம் பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாப்பம்மாள் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா். இவா் மருதாசல முதலியார், வேலம்மாள் தம்பதிக்கு கடந்த 1915ஆம் ஆண்டு பிறந்தார். பாப்பம்மாள் தனது சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்துவிட்டார். இதனால் அவரது பாட்டி இவரை தேக்கம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். பின்னா் மளிகைக் கடை வைத்து அவா்கள் தங்களது வாழ்க்கையைத் தொடங்கினா். பாப்பம்மாளின் கணவா் ராமசாமி.

கடந்த 1992ஆம் ஆண்டு ராமசாமி உயிரிழந்தார். கடைகள் மூலம் கிடைத்த வருமானத்தைச் சோ்த்து வைத்து அப்பகுதியில் விவசாய நிலத்தை வாங்கி, விவசாயம் செய்தார். .திமுகவில் தன்னை சிறு வயதிலேயே இணைத்துக் கொண்ட பாப்பம்மாள் 1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ஆம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதா் சங்கத் தலைவியாகவும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விவாதக் குழு அமைப்பாளராகவும் பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில், 105 வயதிலும் தளராமல் விவசாயம் செய்து வருவதற்காக பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.பாப்பம்மாள்.

பத்மஸ்ரீ விருது கிடைத்தது குறித்து பாப்பம்மாள் கூறியதாவது:-

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்துக்கும், கோவை மாவட்டத்துக்கும் கிடைத்த பெருமை ஆகும். இந்த விருது கிடைத்ததற்கான காரணமே விவசாயம் தான். இதனால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களையும் எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருது கட்டாயம் ஊக்குவிப்பதாக அமையும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வயது மூப்பு காரணமாக நான் அளவான உணவே எடுத்துக் கொள்கிறேன். தினமும் காலையில் குளித்து விட்டு கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் தான் சாப்பிட்டு வருகிறேன். அந்த காலத்தில் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்ததால் உடம்பில் நோய்கள் வந்ததில்லை. அதனால் கிராமங்களில் மருத்துவமனைகளே இல்லாமல் இருந்தது. அதேபோல நம்முடைய வேலையை நாமே செய்து கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.