சென்னை: கடந்த ஆட்சியின்போது, கருப்பு உடையணிந்து டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலின், தற்போது அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ள கமல்ஹாசன், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை’ என்றும் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் அதிக அளவு பாதிப்படைவதாகவும் அரசின் வருமானத்திற்காக மக்களைப் பலி கொடுக்கும் இச்செயலைத் தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியையும், சுகாதாரத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, மக்களின் உயிரைப் பறிக்கும் மதுவை அரசே விற்பனை செய்வதாகவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் அமைவிடம், எண்ணிக்கை தொடர்பான நீதிமன்றங்களின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் மதுக்கடைகளுக்கு எதிராக திமுகவே போராட்டங்களை நடத்தியதாகவும், ஆனால் தற்போது ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாகவும், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி, மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட்டுவிட்டு, புதிது புதிதாக மதுக்கடைகளைத் திறப்பது கண்டனத்துக்குரியது.
திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காகவா திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? இதனால் குடிப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.எனவே, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதைக் கைவிட வேண்டும்.
மேலும், ஏற்கெனவே மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.