மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் அரசு அமைக்க முடியாத இக்கட்டான நிலை தொடர்ந்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் சனிக்கிழமையுடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால் அதற்குள் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும்.   ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு உறுப்பினர்கள் இருந்தும் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியை அமைக்காமல் உள்ளன.    அதிகார பகிர்வு குறித்த ஒரு முடிவுக்கு வராத நிலையில் இரு கட்சிகளும் உள்ளன.

நேற்று பாஜக தலைவர்கள் குழு சந்திப்புக்குப் பிறகு மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாடில், “மக்களின் முடிவுக்கு இணங்க பாஜக – சிவசேனா கூட்டணி விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது.  இது வரை சிவசேனாவிடம் இருந்து அரசு அமைப்பது குறித்த எவ்வித தீர்மானமும் வரவில்லை.  அவ்வாறு அவர்கள் தீர்மானம் அளித்த பிறகு உடனடியாக நடவடிக்கைகலெடுக்கப்படும்.   பாஜகவின் கதவுகள் சிவசேனாவுக்காக எப்போதும் திறந்துள்ளன”எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.  அவர் நேற்று செய்தியாளர்களிடம், “அமைச்சரவை குறித்த பேச்சுக்களுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தபடி உள்ளன.    நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு எப்போதும் மறுப்பு சொன்னதில்லை.   சிவசேனா பேச்சை  ஆரம்பிக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.  அதே வேளையில் பாஜக மூத்த தலைவர் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கிடையாது எனவும் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர் பதவி வகிப்பார் எனவும் கூறி உள்ளார்.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரவுத் தமது கட்சிக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி அளிக்க பாஜக ஒப்புக் கொள்ளாதவரைப் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.    ஆயினும் சிவசேனா தங்களுடன் இணைந்து அமைச்சரவை அமைக்க உதவும் என பாஜக நம்பி வருகிறது.   மூத்த பாஜக தலைவர் ஒருவர் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்காது என உறுதி அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நிலை குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தொரோட், ”மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முக்கிய காரணம் ஆவார். பாஜகவினர் சிவசேனாவுடன் சேர்ந்து தேர்தல் களத்தில் இறங்கி விட்டு தற்போது சிவசேனாவின் முதல்வர் கோரிக்கையை நிராகரிக்கிறது.

இது பாஜகவின் கொடுங்கோன்மையைக் காட்டுகிறது.   இதற்கு பாஜக சரியான விலை கொடுக்க நேரிடும். மொத்தத்தில் சிவசேனாவை மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழிக்க நினைக்கிறது.  ஆனால் பட்நாவிஸ் இந்த திட்டத்தில் தோல்வி அடைந்துள்ளார்.   காங்கிரஸ் கட்சி கட்டுக்கோப்பாக உள்ளதால் அவரால் அக்கட்சியை உடைக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.