கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன்
குற்றங்களை புலன்விசாரணை செய்து வெகு திறமையாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டனை வாங்கி தருவதில் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையாக பேசப்பட்டது… இன்னமும் பேசப்படுவது… நமது தமிழக காவல் துறை. இந்த உவமையை யார் முதலில் தொடங்கினார்கள் என்பது இன்றுவரை தெரியாது என்ற போதிலும் இது ஓரளவிற்கு உண்மையாகவே இருந்து வந்தது.
ஆனால், தற்போதோ நிலைமை படு கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது. நிறைய வழக்குகளில் உண்மை குற்றவாளிகள் யாரென்றே இன்றுவரை வெளிச்சத்துக்கே வராத நிலையில் தான் இருக்கிறோம்.
உதாரணமாக, சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரியார்கள் விடுதலை. அப்படியானால் சங்கரராமனை கொன்ற உண்மை குற்றவாளிகள் யார்? முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணனை கொன்ற வழக்கு மற்றும் மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து மூன்று பேரை கொன்ற வழக்கு இவற்றில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் உண்மை குற்றவாளிகள் யார் என்றே தெரியாத ஒரு கேவலமான நிலையில் இருக்கிறது நமது சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்புகள்.
தமிழக போலீசாரின் புலனாய்வு திறமை எந்த லட்சணத்தில் போய்க்கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக விளக்குகிறது அண்மையில் சென்னையில் நடந்த டாக்டர் சத்யா என்பவரின் கொலை வழக்கு. இவ்வழக்கில் குற்றவாளி என கைது செய்யப்பட்டவர் விடுதலையாகிவிட இவ்வழக்கின் தீர்ப்பினை அக்குவேறு ஆணிவேறாக அலசி அதிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறையை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ம் தேதி டாக்டர் சத்யா அவரது பிளாட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இவரின் கழுத்தில் காப்பர் வயர் இறுக்கப்பட்ட நிலையில் காணப் பட்டது. மேலும் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் காணப்பட்டது. கொலை முயற்சியின் போது இவர் போராடியதற்கு அடையாளங்கள் இவரின் விரல் நகங்களில் இருந்தது
இந்த கொலை சம்பவம் குறித்து, தொடர்ந்து மீடியாக்கள் செய்திகளைவெளியிட.. தமிழ்நாடே அதிர்ந்து போனது. பக்கத்து பிளாட்டில் குடியிருந்த தேப்நாத் என்கிற திரிபுரா இளைஞன் சத்யாவை உடலுறவுக்கு அழைத்ததாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இதற்கு சத்யா மறுக்கவே அவரை இவன் கொலை செய்துவிட்டதாகவும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
22 வயது இன்ஜினியரிங் மாணவனான தேப்நாத்தை போலீசார் உடனே கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்தோடு மக்கள் இதனை மறந்து விட்டார்கள்.
டாக்டர் சத்யா கொலை வழக்கில் செசன்ஸ் நீதிமன்றம் அண்மையில அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா…?
தேப்நாத் குற்றவாளியில்லை. நிரபராதி என்பதே.
அதைவிட முக்கியமான விசயம், இந்த கொடூர கொலை வழக்கினை போலீசார் விசாரணை நடத்திய விதம் காமெடி ரகம் என்று நீதிபதி மஞ்சுளா தனது தீர்ப்பில் காறி துப்பியிருக்கிறார்.
கொடூரமான முறையில் நடந்திருக்கும் கொலை குறித்த வ ழக்கை விசாரித்த விதத்தில் இவ்வளவு அலட்சியமாக போலீசார் நடந்து கொண்டதை போல் தாம் இதுவரை கண்டதில்லை என்று நீதிபதி வெகு கேவலமாய் சாடியிருக்கிறார். கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை உலகின் காமெடி ரகமாக வைக்கலாம் போலிருக்கிறது.
கொலை நடந்த 2015, ஆகஸ்ட் 20 அன்று மாலை மூன்று மணிக்கு டாக்டர் சத்யாவின் பிளாட்டிற்கு அவரது தோழி வருகிறார். சத்யா கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து துடித்துப்போய் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கிறார். இதன் பிறகு கொலையாளி என சந்தேகப்பட்ட தேப்நாத் தனது மனசாட்சி உறுத்தவே, சமூக சேவகரான குமார் என்பவரிடம் உண்மையை சொல்ல, அவர் தேப்நாத்தை காவல்துறையிடம் ஒப்படைத்ததாக போலீசார் கூறியிருந்தனர். ஆனால் நீதிமன்ற குறுக்கு விசாரணையின் போது சமூக சேவகர் குமார் கூறியது என்ன தெரியுமா? தேப்நாத் கைது பற்றி, ஆகஸ்ட் 24-ம் தேதி பேப்பர் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக கூறினார்.
குமார், தேப்நாத்தை போலீசாரிடம் ஒப்படைத்தது ஆகஸ்ட் 24-ம் தேதி. ஆனால் அதே ஆகஸ்ட் 24-ம் தேதி காலையிலேயே எல்லா பத்திரிக்கைகளிலும் ஏக்நாத் கைது பற்றி செய்தி வெளியாகியிருந்தது. இது எப்படி சாத்தியமாகும். தேப்நாத் வாக்குமூலம் அளித்தது ஆகஸ்ட் 24. தேப்நாத்தின் வாக்குமூலம் ஆகஸ்ட் 20-ம் தேதியே பெறப்பட்டு, பின்னர் அது ஆகஸ்ட் 24 என்று திருத்தப்பட்டது நன்றாகவே தெரிகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
அப்படியானால் 20-ம் தேதியே தேப்நாத்தை பிடித்துவிட்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல், நான்கு நாட்கள் அவர்களின் கஸ்டடியில் வைத்திருந்துள்ளனர். சத்யாவை கொலை செய்த தேப்நாத் அவரது செல்போனை பன்னீர்செல்வம் என்கிற ஒருவரிடம் ரூ. 1,200/- க்கு விற்றுவிட்டதாகவும், அப்போது முன்னெச்சரிக்கையாக பன்னீர்செல்வம் தேப்நாத்தை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டதாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றத்திலோ எல்லாமே தலைகீழாகிவிட்டது. செல்போன் கடைக்காரர் பன்னீர்செல்வம் எடுத்ததாக சொல்லப்பட்ட தேப்நாத்தின் மூன்று போட்டோகளும் வேறு வேறு நேரங்களில் எடுக்கப்பட்டது. அதாவது முதல்நாள் மாலை 5:38, இரவு 10:32 மற்றும் மறுநாள் மதியம் 1:56 என போரன்சிக் ரிப்போர்ட்களின் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும், விறக்கப்பட்டது சத்யாவின் செல்போன் தான் என்பதனை போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தவறிவிட்டதுபோலீஸ் தரப்பு. குற்றப்பத்திரிக்கையில் சத்யாவின் மெமரி கார்டு கைப்பற்ற பட்டதாக குறிப்பிடப்பட்ட நிலையில், கைப்பற்றிய பொருட்கள் பற்றிய மகஜரில் மெமரிகார்டு பற்றி எந்த விவரமும் இல்லை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் புலனாய்வு சமார்த்தியம் இத்தோடு நின்றுவிடவில்லை. கொலை நடந்த ஆகஸ்ட் 20ம் தேதி மோப்ப நாய் டாக்டர் சத்தியாவின் பிளாட்டை சுற்றிவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா தியேட்டர் வரை ஓடுகிறது, ஆனால் போலீஸ்காரர்களோ ரத்த கறை படிந்த ஆடைகளை தேப்நாத்தின் வீட்டில் கண்டெடுத்ததாக சென்னார்கள். அப்படி ஆனால் பக்கத்து பிளோட்டிலேயே இருந்த ரத்த கறை ஆடைகளை மோப்ப நாய் மோப்பம் பிடிக்கவில்லையா?
இன்னும் இருக்கிறது.
தேப்நாத் பிளாட்டில் இருந்து கொலை நடந்த 5 நாட்கள் கழித்துதான் ரத்த கறை ஆடைகளை போலீசார் கைப்பற்றியதாக கூறினார்கள். 5 நாட்களாக ரத்த கறை ஆடைகளை கொலையாளி சுத்தம் செய்யாமல் இருப்பாரா?
டாக்டர் சத்யா வீட்டிற்குள் தேப்நாத் போனத்தை பார்த்ததாக கேபிள் டிவி ஆப்ரரேட்டர் தில்லிகுமார் முதலில் சொன்னார். இதேபோல, சத்யா வீட்டில் இருந்து தேப்நாத் வெளியே வந்ததை பார்த்ததாக வாட்டர் கேன் சப்ளையானரான 18 வயது ராபர்ட் சொன்னார். ஆனால் இருவருமே நீதி மன்றத்தில் தான் சொன்னதை மறுத்துவிட்டனர். அதாவது முக்கிய சாட்சிகளே செட் அப் என்பது தெரிந்து போனது.
தேப்நாத் வீட்டில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட ரத்த கறை ஆடைகளில் இருந்த ரத்தம் டாக்டர் சத்யாவின் ரத்தத்திற்கும் தொடர்பு உண்டா என்பது பற்றியெல்லாம் காவல் துறை கண்டுகொள்ளவில்லை. இதேபோல கண்டு கொள்ளாத இன்னொரு முக்கியமான விசயம், வீட்டு உரிமையாளர் சொன்ன ஒரு தகவல். டாக்டர் சத்யாவின் பிளாட் அமைந்த 2வது தளத்திற்கும் 3வது தளத்திற்கும் இடையே ரத்த கறைகள் இருந்ததாக ஜோசப் பிரான்சிஸ் என்ற அவர் சொல்லியிருக்கிறார்.
ஆனால் போலீஸ் அதனை பெரிதாக பொருட்படுத்தவே இல்லை. பொதுவாக கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்தால் அங்கேயே முக்கிய ஆதாரமாக சிக்குவது புதிய நபரின் கைரேகை தடயங்கள்தான்.
ஆனால் டாக்டர் சத்யா கொலை வழக்கில் கழுத்தில் குத்தியிருந்த கத்தியின் மேல் படிந்திருந்த ரேகை யாருடையது என்பதைக்கூட போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை. டாக்டர் சத்யாவிடம் நன்கு பரிட்சயம் உள்ள இளைஞர் தேப்நாத் என்பதால் செக்ஸ், பணம் கேட்டு மிரட்டல் என கச்சிதமாய் ஜோடித்து அப்படியே குற்றபத்திரிக்கையை தாக்கல் செய்து கதையை ஓட்டிவிட்டார்கள்.
ஆனால் சட்டப்படி நிருப்பிக்கப்பட வேண்டிய நீதி மன்றத்தில் போலீசாரின் யோக்யதை, பல்லிளித்துவிட்டது. இதில் முக்கியமான கொடுமை என்னவென்றால் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இன்ஜினியரிங் மாணவர் தேப்நாத் ஜாமீனே கிடைக்காமல் இரண்டரை ஆண்டுகள் விசாரணை கைதியாகவே சிறையில் இருந்துள்ளார் இப்பொழுது குற்றசாட்டுகள் நிருபிக்கப்படாமல் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
அப்படியானால் இந்த இரண்டைரை வருடம் சிறையில் இருந்த தேப்நாத்திக்கு இந்த சமூகம் தரப்போகும் நிவாரணம் என்ன? இரண்டரை வருடமாக ஜாமீனே கொடுக்காமல் வதைத்த நீதி மன்றத்தின் போக்குகிற்கு யார் தண்டனை கொடுப்பது?
டாக்டர் சத்யாவை உண்மையிலேயே கொலை செய்த குற்றவாளி அல்லது குற்றவாளிகள் யார்? இவ்வளவு பரபரப்பான வழக்கை இந்த அளவிற்கு மொட்டையாக நடத்திய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்திக்கு காவல் துறை அளிக்கப்பபோகும் பரிசு என்ன? திறமையற்ற அதிகாரிகள் ஒரு புறம், பழிவாங்குவதற்காக அந்த நேரத்தில் எப்ஐஆரை போட்டு யாரை வேண்டுமானாலும் உள்ளே அனுப்புகிற போலீஸ் அதிகாரிகள் இன்னொரு புறம்.
இப்படிப்பட்ட அதிகாரிகள் மத்தியில்தான் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதோடு குற்றவாளிகள் காலம், கலமாக தப்பித்து வருகிறார்கள் என்பதை காணும் போதுமா வேதனை உச்சக்கட்டத்தை எட்டுகிறது.
புலனாய்வை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டும் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதிபதிகள் சி.டி. செல்வன், மற்றும் என். சதிஷ்குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கடுமையாக கூறியுள்ளது.
கேரட்டராப் பிராசிக்டியூஷன் மற்றும் தமிழக அரசின் தலைமைக்கு இந்த உத்தரவை உயர் நீதி மன்றம் பிறப்பித்துள்ளது. ஆனால் அதே உயர் நீதி மன்றத்திற்கு இன்னொரு விசயம் பெரிய அம்சமாகவே படவில்லை.
திருப்பூரில் உறவினர் பெண்ணையும் அவரது 6 வயது மகனையும் கிரைண்டர் கல்லால் அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டன விதிக்கப்பட்டது. திருப்பூர் செஷன்ஸ் நீதி மன்றம் தந்த இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையிட்டை சென்னை உயர் நீதி மன்ற பென்ஞ்ச் விசாரித்து போலீசாரின் புலனாய்வை கடுமையாக சாடியதோடு, இரட்டை ஆயுள் தண்டனை என்று செசன்ஸ் நீதிமன்ரம் விதித்த தீர்ப்பை ரத்து செய்தது.
தாயும் மகனும் கொடுரமாக கொல்லப்பட்ட ஒரு வழக்கில் போலீசார் புலனாய்வில் காட்டிய அலட்சியம் மிகவும் பயங்கமாக உள்ளது என்று நீதிமன்றம் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. குற்றம் நடந்த இடத்தில் கைப்பற்ற பொருட்கள் கீழ் கோர்ட்டில் உடனடியாக சமர்பிக்கப்படவில்லை என்பதில் தொடங்கி சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கைரேகைகளை கண்டுபிடிப்பதில் கூட போலீசார் எள் முனையளவும் அக்கறை காட்டவில்லை என பிரித்து மேய்ந்திருக்கிறது உயர் நீதி மன்றம்.
எல்லாம் சரி… புலனாய்வில் கோட்டைவிட்டு விட்டு உண்மையான குற்றவாளியை பிடிக்க முடியாத போலீசாரை துறை ரீதியாக தண்டிக்கலாம். அதே நேரத்தில் உயர் நீதி மன்றம் இப்படி ஓட்டைகளை கண்டிப்பிடித்து சொல்கிற ஒரு வழக்கில் குற்றம் சாட்டபட்டவருக்கு எப்படி இரட்டை ஆயுள் தண்டனையை திருப்பூர் செஷன்ஸ் நீதி மன்றத்தால் தர முடிந்தது? அப்பொழுது அந்த நீதிபதியின் மேல் நடவடிக்கை என்ன என்ற கேள்வி தானாக எழுவது இயல்புதானே.
காவல் துறையும் நீதி துறையும் இந்த அளவில் போய்க்கொண்டிருந்தால் சமான்ய மக்களுக்கு எப்படி இவற்றின் மீது மதிப்பு வரும் நம்பிக்கை கூடும்?