சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜக அரசின் நடவடிக்கையா? தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசு எப்படி திட்டமிட்டுள்ளது? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிள்ளார்.
கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்று கேள்வி எழுப்பி உள்ளதுடன், கல்வி, சமூக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பது பற்றியும் கடுமையாக சாடியுள்ளார்.
#NEP-க்கு தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது, அதே நேரத்தில் இலக்குகளை நிறைவேற்றாதவர் களுக்கு தாராளமாக வெகுமதி அளிப்பது – தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசு இப்படித் திட்டமிடுகிறதா? அதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்! என தெரிவித்துள்ளார்.
மத்தியஅரசு கடந்த 2020ம் ஆண்டு முதல் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு மத்தியஅரசு வழங்கும் நிதி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருவதால், தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை கடைபிடிக்க முடியாது என தமிழ்நாடு அரச திட்டவட்டமாக கூறி வருகிறது. இதனால், தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி பணத்தின் முதல் தவணை தொகை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25% இடங்களுக்கான நிதியை சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தை மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மீதமுள்ள 40% நிதிக்கு மாநில அரசே பொறுப்பு. இதனால், 2024-25 கல்வியாண்டில் SSA திட்டத்திற்கு மத்திய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். முதல் தவணையான ரூ.573 கோடி ரூபாயை ஜூன் மாதமே வழங்கியிருக்க வேண்டிய நிலையில், தமிழக அரசு சார்பில் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில், மத்தியஅரசு கொண்டுவந்துள்ள பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு முதலில் ஒப்புதல் வழங்கியது. அதுதொடர்பாக தலைமைச்செயலாளர் மத்தியஅரசுக்குகடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை மத்தியஅரசு வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசு, புதிய கல்விக் கொள்கை அம்சங்களைத் தவிர்த்து பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து உள்ளது.
இதனால் மத்தியஅரசு நிதியை விடுவிக்க மறுத்து வருகிறது.
இந்த நிலையில், மாநில கல்வித்துறைக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்காதது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “NEP-க்கு (தேசிய கல்விக் கொள்கை) தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது. அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை பாஜக அளிக்கிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசின் திட்டம் இதுதானா? இதுபற்றி நம் தேச மக்களே முடிவெடுக்க வேண்டும் என விட்டுவிடுகிறேன்!”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனியார் பத்திரிகை நிறுவனத்தில் வெளியான ரிப்போர்ட் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், தேசிய குடும்பநலத் துறை சர்வே 2019-2020ஐ குறிப்பிட்டு, கல்வியில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களுக்கு மத்தியஅரசு பிஎம்ஸ்ரீ திட்டம் மூலம் உரிய நிதியை வழங்க மறுக்கிறது என பதிவிடப்பட்டுள்ளது.