டமாஸ்கஸ்:
சிரியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
இங்குள்ள அல்-பாப் நகர் அருகே நேற்று முன்தினம் இரண்டு கார்களில் வைத்திருந்த குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று ஹாம்ஸ் நகரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ராணுவப் புலனாய்வு தலைமை அலுவலகம் அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இந்தப்பகுதிக்குள் ஊடுருவிய 6 தீவிரவாதிகள், தங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் உளவுத் துறையின் மூத்த அதிகாரி உட்பட 42 பேர் பலியாகினர்.
ஹாம்ஸ் நகரம் தற்போது அரசின் கட்டிப்பாட்டில் இருந்தாலும் அடிக்கடி குண்டுவெடிப்பு நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்நகரில் நிகழ்ந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 64 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.