டில்லி
அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படாவிட்டால் இந்தியாவும் இன்னொரு சிரியாவாக மாறும் என இந்து மத துறவியும் வாழும் கலை அமைப்பின் அமைப்பாளருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறி உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பது குறித்த விவகாரம் உச்சமன்றத்தில் வழக்காக உள்ளது. இந்நிலையில் இந்து மத துறவியும் வாழும் கலை யோகா அமைப்பின் அமைப்பாளருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இந்த விவகாரத்தில் ஒரு அமைதித் தீர்வு காணும் முயற்சியிலீடு படுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் அவர் இது குறித்து சுமார் 500 மதத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியில் சுமுகமாக முடிக்க முயன்று வருவதாக அவர் தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில் சையத் சல்மான் ஹுசைன் நத்வி என்னும் இஸ்லாமியப் பிரமுகர் ஷரியா சட்டப்படி பாபர் மசூதியை வேறு ஒரு இடத்துக்கு மாற்றி விடலாம் என கருத்து தெரிவித்தார். அதற்காக அவரை அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியம் அந்த அமைப்பில் இருந்து நீக்கியது. அவரையும் சமீபத்தில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சந்தித்தார். ரவிசங்கர் அவருக்கு இம்மாதிரி பேச பணம் கொடுத்தாக ஒரு புகார் எழுந்தது.
இந்நிலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஒரு ஆங்கில ஏட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் நத்விக்கு பணம் கொடுத்ததாக வந்த தகவல்கள் தவறானது. அவர் இஸ்லாமியர்களுக்கு ராமர் கோவில் உள்ள இடத்தில் உரிமை இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அதில் தவறேதும் இல்லை.
இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் தங்களுக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டு அவர்களாகவே அங்கிருந்து விலக வேண்டும். அவ்வாறு நடைபெற வில்லை எனில் இந்தியா இன்னொரு சிரியாவாக மாறி விடும்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அந்த இடத்துக்கு உரிமை கோருவதை விட வேண்டும். அயோத்திக்கும் இஸ்லாமியர்களுக்கும் சம்மந்தம் இல்லை. ராமர் பிறந்த இடம் அது. அங்கு தான் அவருக்கு கோவில் எழுப்ப முடியும்.
அதே போல அங்கு இரு மதங்களுக்கு பொதுவாக அங்கு மருத்துவமனை அமைக்கலாம் என சிலர் சொல்வதும் அர்த்தமற்றது. இதனால் சர்ச்சைகள் இன்னும் அதிகமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.