ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி காணாமல் போய் உள்ளது.

சென்ற மாதம் 27 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதலை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் எந்த ஒரு இலக்கும் தாக்கப்படவில்லை என விமானப்படை அறிவித்தது.   அப்போது இந்திய விமானப்படையின் எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப் பட்டது.

இந்த ஹெலிகாப்டர் காலை 10 மணிக்கு ஸ்ரீநகர் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.   ஸ்ரீநகர் அருகில் உள்ள புத்காம் என்னும் இடத்தில் காலை சுமார் 10.10 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6 விமானப்படை வீரர்களும் கீழே இருந்த பொதுமக்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

இந்த விசாரணையில் இந்திய ஏவுகணை தாக்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் அந்நிய நாட்டு விமானம் என தவறாக கணிக்கப்பட்டு ஏவுகணை ஏவப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.  அதை ஒட்டி இது குறித்த எந்த ஒரு விசாரணைக்கும் தயார் என விமானப்படை அறிவித்தது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி காணவில்லை என தகவல்கள் வந்துள்ளன. விமானப் பயணத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய கருப்புப் பெட்டி காணாமல் போனது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பல பாகங்களை அங்குள்ள மக்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் கருப்புப் பெட்டியையும் எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.