
கொழும்பு
இலங்கையில் பெண்களுக்கு மதுபானம் விற்க கொடுக்கப்பட்ட அனுமதியை ஜனாதிபதி மைத்ரிபாலா சிரிசேனா ரத்து செய்துள்ளார்.
இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடம் இலங்கை அரசு பெண்களுக்கு மது பானம் விற்க தடை செய்தது. பெண்கள் மது உற்பத்தி ஆலைகளிலும் மது விற்பனைக் கூடங்களிலும் பணி புரியவும் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை நீக்கிக் கொள்வதாக சமீபத்தில் இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரா ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். பாலின வேறுபாட்டை ஒழிக்கவும், சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும் இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இது இலங்கையில் உள்ள பெண்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால் இலங்கையில் மெஜாரிட்டியாக உள்ள புத்தமத சமுதாயத்திடையே இது எதிர்ப்பை உண்டாக்கியது. இதனால் இலங்கையில் குடும்ப கலாச்சாரம் பாழடையும் எனவும் பெண்கள் மதுவுக்கு அடிமையாகி விடுவார்கள் எனவும் புத்த மதத்தினர் கருத்து தெரிவித்தனர்.
இதையொட்டி மங்கள சமவீரா பிறப்பித்த உத்தரவை ஜனாதிபதி மைத்ரிபாலா சிரிசேனா ரத்து செய்துள்ளார். இதனால் பெண்களுக்கு மதுபானம் விற்க மீண்டும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுபான தொழிற்சாலையிலும், விற்பனைக் கூடங்களிலும் பணி புரியுவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை எனினும் செய்தித் தாள்களைப் பார்த்துதான் தாம் அறிந்துக் கொண்டதாகவும் ஜனாதிபதி கூறி உள்ளார்.
ஜனாதிபதி சிரிசேனா பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் எனக் கூறிக் கொண்டே இது போல மீண்டும் பெண்களுக்கு மதுவகைகள் விற்கத் தடை விதித்துள்ளது அவரின் இரட்டை வேடத்தைக் காட்டுவதாக டிவிட்டரில் இலங்கையை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கருத்து தெரிவித்துள்ளனர்/.
[youtube-feed feed=1]