சென்னை: போதை மருந்து கடத்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கான முக்கிய கேந்திரமாய் இலங்கை மாறியுள்ளதை இந்தியப் புலனாய்வு விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் உறுதிபடுத்துகின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஹெராயின் மற்றும் கன்னபிஸ் மற்றும் மெதஃபிடாமைன் போன்றவை இலங்கையில் புழங்கும் முக்கியமான சட்டவிரோத போதைப் பொருட்கள். கடந்தமாதம், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 10.61 கிலோ எடையுள்ள கிரிஸ்டல் மெத் மற்றும் 1.475 கிலோ எடையுள்ள கெடாமைன் போன்றவை தமிழகத்தில் கைப்பற்றப்பட்டன.
அதேசமயம், கடந்த 2018ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கை அதிகாரிகளால் வெறும் 5.8 கிலோ மெத் மட்டுமே கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அந்நாட்டின் நிலையை நாம் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டிணம் போன்ற மாவட்டங்களிலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு கடத்துவதையே பாதுகாப்பான மற்றும் எளிதான முறையாக கருதுகிறார்கள் கடத்தல்காரர்கள். ஏனெனில், விமானம் வழியாக கடத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதால் அவர்கள் இம்முறையை தேர்வு செய்கிறார்கள்.
எனவே, சென்னையிலிருந்து சாலை வழியாக ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்து படகோட்டிகளின் மூலமாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.