துபாய்
நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு வர மிகவும் உதவிய துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இந்தியர் இதுவரை 4700 உடல்களை தாய்நாடுகளுக்கு அனுப்ப உதவியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த அஷ்ரஃப் ஷெரி தமரசேரி என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். துபாய் நாட்டு சட்டப்படி வெளிநாட்டினர் துபாயில் இறந்தால் அவர்கள் உடலை அவரவர் நாட்டிற்கு அனுப்ப சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ளன. இதனால் பல வெளிநாட்டவர்கள் துபாய் நாடுகளில் இறக்கும் போது அவர்கள் குடும்பத்தினருக்கு உடலைப் பெறுவதில் மிகவும் கஷ்டங்கள் உண்டாகின்றன.
அஷ்ரஃபுக்கு அமீரகத்தின் சட்டதிட்டங்கள் முழுமையாக தெரியும். அதானால் இது போல மரணம் அடைபவர்களின் உடலை அவரவர் நாட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 4700க்கும் மேற்பட்ட உடல்களை இவ்வாறு அனுப்பி வைத்துள்ளார். தற்போது துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை அவர் கணவர் போனி கபூர் கோரிய போது அந்நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் உறுதி அளிக்க வேண்டும் என அரசால் கூறப்பட்டது.
உடனடியாக அஷ்ரஃப் தனது உறுதிமொழியை அளித்து அவர் கையெழுத்து இட்டு ஸ்ரீதேவியின் உடலை பெற்றுக் கொண்டுள்ளார். இது போல பலருக்கும் உதவி செய்யும் இவர் இதற்காக எந்த ஒரு ஊதியமும் யாரிடமும் வாங்குவதில்லை. அது மட்டுமின்று உடல் கிடைத்த பின் நன்றி கூறி வரும் தொலைபேசி அழைப்புக்களில் கூட பேசுவதில்ல. அந்த நேரத்தில் வேறு யாருக்காவது உதவி தேவைப்பட்டு தன்னை அழைக்கலாம் என்பதால் நன்றியையும் அவர் எதிர்பார்ப்பது இல்லை.