கொழும்பு: இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த தமிழ் தேசியவாதி இராஜவரோதயம் சம்பந்தன் எனப்படும் இரா.சம்பந்தன் (வயது 91), காலமானார்.
வயது முதிர்வு காரணமாக, இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ்த் தேசிய அரசியலின் மூத்த உறுப்பினர் சம்பந்தன் காலமானார். வயது முதிர்வு காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. அதன்போது, இரா.சம்பந்தன் சுகவீனமுற்றிருப்பதாகவும் விடுமுறை வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே அந்த அனுமதி வழங்கப்பட்டது.
ஈழத் தமிழர்களின் மூத்த பெரும் தலைமை தனது 91ஆவது வயதில் இன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டது. . அவரது மறைவுக்கு முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் வெளியிட்டுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் சக ஊழியர், நாங்கள் பல நாட்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த சோக இழப்பை போக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
இரா சம்பந்தன்:
இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க முடியாததுமான மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன் (R. Sampanthan). உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று இயற்கை எய்தினார். விமர்சனங்களுக்கு அப்பால் தன்னுடைய காலத்திற்குள் ஈழத்தமிழர்களுக்கு அரசியல்சார் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன், அதே கொள்கையில் உறுதியாகவும் இருந்து வந்த தேசிய தலைவர் இரா.சம்பந்தன் வயது முதிர்வு காணரமாக காலமானார்.
1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி திருகோணமலையில் பிறந்தவர் சம்பந்தன், யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வியை தொடர்ந்த சம்பந்தன் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானவர்.
1972ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்து பின்னர் 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவெடுத்த கட்சியின் ஊடாக 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 15,144 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் சம்பந்தன்.
1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.
இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.
மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனையடுத்து 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட சம்பந்தனால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாமல் போனது.
இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம், அவர் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட ஏழு சந்தர்ப்பங்களிலும் ஒரே ஒரு முறை மாத்திரமே தோல்வியை சந்தித்திருக்கின்றார்.
இதேபோல, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர், அந்த கூட்டமைப்புக்கு சம்பந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு 18 வருடங்களின் பின்னர் மீண்டும் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர், 2004, 2010, 2015 மற்றும் 2020ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல்களின் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்ட சம்பந்தன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்வானர்.
2015ஆம் ஆண்டு தற்போதைய அதிபர் ரணில் மற்றும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பான முறையில் பணியாற்றினார். ஏற்கனவே கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி விலகியிருந்தார். அத்தோடு, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காததால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னரான தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் ஊடாக தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.