லண்டன்:

சுனில் கவாஸ்கருக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்  இலங்கை கேப்டன் கருணரத்னே.

இன்று நடைபெற்ற போட்டியில்,  இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்த நிலையில், இலங்கையை எதிர்த்து ஆடிய  நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இலங்கை அணி மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  கேப்டன் கருணாரத்னேவும், திருமன்னேவும்  களமிறங்கினார்கள்.

முதல் ஓவரின் 2-வது பந்திலே திருமன்னே வெளியேற ஆட்டத்தின் கடைசி வரை நின்று கேப்டன் கருணாரத்னே ஆடி வந்தார்.  அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில்,  இலங்கை அணி 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன்  கருணரத்னே 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் .

இதற்கு முன்னர் உலக கோப்பை போட்டியில் ஆடிய இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் இதுபோன்று தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடி சாதனை புரிந்தார். அதைத் தொடர்ந்து தற்போது 2வது வீரராக இலங்கை கேப்டன் திலகரத்னே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் சாதனை புரிந்துள்ளார்.