கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அரசு திவாலாகும் என்பதை பத்திரிகை டாட் காம் இணையதளம் கடந்த ஏப்ரல் மாதமே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலால் தவிக்கும் மக்கள், ஆட்சியாளர்கள் பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி வில வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

இந்த சிக்கலுக்கு இடையே கடந்தவாரம்  புதிய பிரதமராக ரணில் விக்கிர சிங்கே பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசியவர், “நாங்கள் திவால்  நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை” என்று இரு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். மேலும்,  நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை எனவும், இதனால் நெல் சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது என்றும்  கவலை தெரிவித்ததுடன்,  ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் வேதனை தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு “கடந்த நிர்வாகமே காரணம்” என்றும் சுட்டிக்காட்டியதுடன்,  எங்களிடம் டாலர் இல்லை, ரூபாவும் இல்லை. நாங்கள் தற்போது நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்கு உதவி  செய்ய தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அந்நாட்டு அதிபர் கோத்தபயவுக்கு தகவல் தெரிவித்து உள்ளது.   இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க  தயார் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், அதை எற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கிஅறிவித்து உள்ளது. ஏற்கனவே நாட்டின் பணவீக்கம்  30 சதவிகிதமாக இருந்து வந்த நிலையில், அது மேலும் உயர்ந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று அந்நாட்டு மத்திய வங்கி கவர்னர் வீரசிங்க தெரிவித்து உள்ளார்.

கடனுக்கான வட்டிகூட கட்ட முடியாத சூழல்: திவாலாகிறது இலங்கை?