யாழ்ப்பாணம்
இலங்கை ராணுவம் 27 ஆண்டுகளுக்கு மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த யாழ்ப்பாணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வெளியேறியது.
யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மிலிட்டி. அங்கு இனப்போர் தொடங்கிய பின் இலங்கை ராணுவம் அந்த துறைமுகத்தை கைப்பற்றி அங்குள்ள மீனவர்களை அங்கிருந்து அகற்றியது. தற்போது அதிபர் சிரிசேனா தமிழர்களின் நிலங்கள் ஒவ்வொன்றாக திருப்பி அளிக்கப்படும் என கூறியதை அடுத்து, ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.
வெளியேறும் முன்பு ராணுவ அதிகார் தர்ஷனா கூறியதாவது:
”இந்த துறைமுகம் பாதுகாப்பற்றது என்ற காரணத்தினால் இதை நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். தற்போது நிலமை சீராக உள்ளதால் இனி மீனவர்கள் இங்கு பாதுகாப்பாக வசிக்க முடியும். இனி விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் இருக்காது. அதனால் நாங்கள் துறைமுகத்தை சேர்ந்த 54 ஏக்கர் நிலத்தில் இருந்து வெளியேறுகிறோம்” என்றார்.
மீனவர்களும் அங்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். ராணுவம் வசம் உள்ள பாக்கி நிலப்பரப்பையும் விடுவித்தால் தங்களுக்கு இன்னும் நல்லது என தெரிவிக்கின்றனர். அங்கு முன்பிருந்த வீடுகள் யாவும் அழிக்கப்பட்டு விட்டன. ஆகவே புது வீடு கட்ட அரசு உதவியை எதிர்பார்க்கின்றனர். யாழ்ப்பாண ஆட்சி அதிகாரி வேதநாயகன் இந்த கோரிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் அரசு உதவி செய்வதை விட புதிய வீடுகளைக் கட்டிக் கொடுப்பதே சிறந்தது என கூறியுள்ளார்.