கொழும்பு:

லங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் காரணமாக கடந்த 3 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய தள சேவை இன்றுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக ஏராளமான மசூதிகள், வாகனங்கள், கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக வன்முறையை தடுக்கும் வகையில், அங்கு அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  மத வன்முறை மற்ற பகுதிகளுக்கும் பரவாத வகையில் சமூக வலைதளங்களை அந்தநாட்டு அரசு முடக்கி  இருந்தது..

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வைபர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சேவைகைளை 3 நாட்களுக்கு முடக்கப்படுவதாக கடந்த புதன்கிழமை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் இன்று முதல் சமூக வலைதளங்கள் இயக்கத் தொடங்கியது.

ஆனால்,  மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் வரும் 12ந்தேதி (திங்கள்) முதல்தான் செயல்பட தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மசூதிகள் சேதப்படுத்தப்பட்டதால், கண்டி மாவடத்தில் பல இடங்களில் நேற்று மற்ற மக்களின் உதவியுடன்  முஸ்லிம்கள்  பொது இடங்களில் தொழுகை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.