கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்சே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட 13 பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள்” தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகள் நாட்டை விட்டு வெளியேற மே 12 வியாழன் அன்று இலங்கை நீதிமன்றம் தடை விதித்தது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், ஆட்சியாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் வேறுவழியின்றி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், கொழும்பு நகரில் உள்ள போராட்ட களத்துக்குள் நேற்று முன்தினம் புகுந்த மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், அமைதியான முறையில் போராடி வந்த மக்கள் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இலங்கை முழுதும் காட்டுத்தீ போல கலவரம் வெடித்தது.
இந்த கலவரங்களில், ஆளுங்கட்சி எம்.பி., அமரகீர்த்தி உட்பட எட்டு பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிலைமை கைமீறிப் போனது. இலங்கையின் அம்பந்தோட்டையில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பூர்வீக இல்லத்துக்கு மக்கள் தீ வைத்தனர். அப்பகுதியில் உள்ள ராஜபக்சேவின் தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் நினைவிடத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். குருனேகலா என்ற இடத்தில் உள்ள மகிந்த ராஜபக்சே இல்லமும் தீக்கிரையானது .பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், கொழும்பு நகரில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ‘டெம்பிள் ட்ரீஸ்’ மாளிகையில் மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது, போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். மக்கள் போராட்டம் தீவிரமடைவதை கண்டு பயந்துபோன மகிந்த ராஜபக்சே, டெம்பிள் ட்ரீஸ் இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.
‘இலங்கையில் கலவரத்தை துாண்டிய குற்றத்திற்காக மகிந்த ராஜபக்சேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என, அந்நாட்டு எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மகிந்த ராஜபக்சேவின் இருப்பிடத்தை போராட்டக்காரர்கள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜபக்சே தொடர்பான வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், ராஜபக்சே உள்பட அவரது கூட்டாளிகள் 13 பேர் வெளிநாடு தப்பிச் செல்ல தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.