ஸ்ரீ ஆதிநாத பெருமாள் கோவில்
அமைவிடம் :
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் இது 89வது திவ்ய தேசம். நவதிருப்பதியில் இது 5வது திருப்பதி. இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். நவகிரகத்தில் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் எனத் திருப்பெயர் பெற்றார்.
மாவட்டம் :
அருள்மிகு ஆதிநாத பெருமாள் திருக்கோவில், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாவட்டம்.
எப்படிச் செல்வது?
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் உள்ள இவ்வூருக்குத் திருநெல்வேலி மற்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
கோயில் சிறப்பு :
இங்குப் பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.
ஐயாயிரம் வருடம் பழமையான நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரம் இன்றும் காட்சியளிக்கிறது. புளியமரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளியமரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளியமரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை.
நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்ச காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.
இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து நவதிருப்பதி எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவகிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.
சங்கு மோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று கூறுகின்றனர்.
கோயில் திருவிழா :
மாசிமாத உற்சவம், குருப் பெயர்ச்சி, வைகாசித் திருவிழா ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை :
நவகிரக தோஷங்கள் நீங்க இங்குப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
பிரசாதம் :
இக்கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் வங்கார தோசை மிகவும் பிரசித்தி பெற்றது.