மூத்த பத்திக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன்
மாநில சுயாட்சியை ஒழிப்போம்… தமாஷ் காட்சிகளை படைப்போம்..
இதுதான் தாரக மந்திரமாக இருக்கிறது, மோடிக்கும் அமிஷாவுக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஆரம்பித்தவர்கள் அடுத்த பேரழிவை கையில் எடுத்திருக்கிறார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெரும் குற்றங்களில் கைதாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய திருத்தம் கொண்டு வருகிறார்கள்.
இருக்கவே இருக்கிறது, எதிர்க் கட்சிகளை கடித்து குதறும் நாயாகவே மாறி போயிருக்கும் அமலாக்கத்துறை.
ஒரு முதலமைச்சரை கைது செய்து 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் வைத்திருக்க அதனால் செய்ய முடியாதா?
இதில் காமெடி என்னவென்றால், புதிய சட்ட திருத்தம் பிரதமருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இந்த கைது பொருந்துமாம்.
எப்படி எல்லாம் கதை அளக்கிறார்கள் பாருங்கள்.
பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்பு அவரையே கைது செய்யும்?
ஒருவேளை மத்திய உள்துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் ஆகாமல் போய் குடியரசுத் தலைவரும் மண்டையை ஆட்டினால் பிரதமரை உள்ளே தள்ளலாம்.
இந்த நாடு மக்களாட்சி தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் இழந்து எவ்வளவு நாசமாக போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இப்போதைக்கு சொல்கிறோம்.
நாட்டில் உயர்நீதிமன்றங்களின் நீதிபதி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல்.
ஒரு நீதிபதி வெளிப்படையாக தப்பு செய்து சிக்கினாலும், உச்ச நீதிமன்ற குழு அமைத்து விசாரித்து அதன் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் கண்டன தீர்மானத்தை கொண்டு வந்து மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியோடு தான் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும்.
இதை செய்து முடிக்கவே பல மாதங்கள் பிடிக்கும். அப்புறம் குற்றத்திற்கான சிறை தண்டனை கிடைக்க அடுத்த கட்ட நடவடிக்கை துவங்குமா என்பதை பற்றி எல்லாம் கேள்வியே கேட்கக்கூடாது
ஆனால் கோடிக்கணக்கான வாக்காளர்களைக் கொண்ட ஒரு மாநிலத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சரை 30 நாட்கள் கைது செய்து சிறையில் அடைத்தால் பதவி நீக்கம் செய்ய முடியுமாம்.
கற்பனை தான்.. அரசியலமைப்புச் சட்டம் 142 வது பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பிரதமரை கைது செய்து உள்ளே தள்ளி ஜாமீன் தர மறுக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஃபேண்டஸி டைரக்டர் ஷங்கர் பட பாணியில் யோசித்துப் பார்த்தால், பிரதமருக்கு ஆகாத முதலமைச்சர்கள் தங்கள் மாநில விசாரணை அமைப்புகளை வைத்து பிரதமரை கைது செய்ய அடுத்தடுத்து உத்தரவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நாளைக்கு நமக்கும் இதே கதி தான் என்று உணராத மாநில அரசியல் தற்குறி தலைவர்களே, புதிய சட்ட திருத்தத்தை வரவேற்பார்கள் என்றால், மதவெறி மட்டுமே ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிற கும்பல்களை பற்றி எல்லாம் சொல்லவே வேண்டியதில்லை.
நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்து விடுதலைப் பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு ஒரு துணை கண்டம் கடைசி வரை, மக்களாட்சி தத்துவத்திலே தான் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தலையெழுத்தா என்ன?