சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில், துரைமுருகன் உள்பட மூத்த அமைச்சர்களால் அமர வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 3,000லிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார். தொடர்ந்து மேலும் இரண்டு முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.
முன்னதாக மெரினாவில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது/ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன், விளையாட்டுத்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என கூறினார். அதைத்தொடர்ந்து, நேராக மெரினாவுக்கு சென்றவர், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் மூத்த அமைச்சர்களும் சென்றனர். மெரினா கடற்கரைக்கு வருகை தந்த உதயநிதிக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தலைமைச் செயலகம் சென்றவர், அங்கு தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு வந்தார். அவரை மூத்த அமைச்சர்கள், அழைத்துச் சென்று, அவரது அறையில் அமர வைத்தனர். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி. தயாநிதி மாறன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, மூர்த்தி, மெய்யநாதன், மா.சுப்பிரமணியன் மற்றும் பல அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தனது இருக்கையில் அமர்ந்து அலுவலக பொறுப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக, விளையாட்டு வீரர்ரளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 3,000லிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.
இதைத்தொடர்ந்து, பின்னர் பெரியார் திடல், பேராசிரியர் இல்லம் , கோபாலபுரம், சிஐடி காலனி ஆகிய இடங்களுக்கு அமைச்சர் உதயநிதி சென்று மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின் மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிவுச்சுடர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நல்லாட்சி செய்த நாயகரும், சொல்லாலும், செயலாலும். எழுத்தாலும் தமிழைப் போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்த சமூகநீதிப் பாதையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அடியொற்றி செயலாற்றி வரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.2.2022) இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.
மாண்புமிகு இளைஞர் நலன். விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனிற்காகவும் மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது, “ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிற்கினங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2027-23ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டத்தினைச் சேர்த்திடவும் முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே 10 விளையாட்டுக்களில் மாநில போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெறும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி, 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்திடும் வகையிலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை ரூ.47,04,72,800/ ரூபாய் நாற்பத்தேழு கோடியே நான்கு இலட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எண்ணூறு) செலவில் நடத்திடவும். இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைத்திட கோரும் கோப்பில் கையொப்பமிட்டார்.
நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கபடி விளையாட்டு வீரர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. எச். ஜாஃபர் திரு. கே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஏ. கிறிஸ்டோபர். வலுதூக்கும் வீரர்கள் (Power lifting) சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஜி. பொன்சடையன், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. எஸ். ஜெகநாதன். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஆர். குத்தாலிங்கம். பளுதூக்கும் வீரர் (Weight lifting) திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வி. கோவிந்தராஜ், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர் திரு. ஏ.எல். கலில்ரகுமான், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் திரு.எஸ். சிவராஜன் ஆகிய ஒன்பது விளையாட்டு வீரர்களுக்கு 1.3.2022 முதல் 1.8.2022 வரை மாதம் ரூ.3000/- ஓய்வூதியம் வழங்குவதற்கும், 2.8.2022 முதல் ஆயுட்காலம் வரை மாதம் ரூ.6000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் international Shooting Sports Federation) சார்பில் பெரு நாட்டின், லிமா நகரில் 27.9.2021 முதல் 10. 0.2021 வரை நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீட்டர் Standard Pistol பெண்களுக்கான தனிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி நிவேதிதா அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒன்பது விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளையும், செவ்வி நிவேதிதா அவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்.