சென்னை: சென்னையை அடுத்த புறநகர் பகுதியான செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக தொழில்நுட்ப – பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரி உள்ளது.
செம்மஞ்சேரியில் உள்ள குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி இந்தியாவின் எதிர்கால விளையாட்டு உள்கட்டமைப்பிற்கான வரைபடமாக உள்ளது. விளையாட்டுத்திறன், விளையாட்டுத் திறன் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றின் கலாச்சாரத்தை வளர்ப்பதே முதன்மையான நோக்கமாகும், அதே நேரத்தில் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டியிடுவதற்கான அதிநவீன வசதிகளை வழங்குகிறது
தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் பல்வேறு வகையான விளையாட்டுகளினுடைய சர்வதேச போட்டிகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் உலக தரத்திலான மெகா ஸ்போர்ட் சிட்டி எனும் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்து இருந்தார்.
அதன்படி, விளையாட்டு நகரத்தை அமைக்க தகுந்த இடத்திற்கான ஆய்வுகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வந்தன. அதன்படி, செம்மஞ்சேரி, வண்டலூர், குண்டம்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, செம்மேஞ்சேரியை தேர்வு செய்து அங்கு விளையாட்டு நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இதற்கான தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது. இந்த விளையாட்டு நகரம் ஓஎம்ஆர் சாலையில் சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு அருகில் 105 ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது.
இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இங்கு டேபிள் டென்னிஸ் அரங்கம், வாலிபால் மைதானம், ஜிம்னாஸ்டிக் பயிற்சி கூடங்கள், ஹாக்கி மைதானம், நீச்சல் குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் வீரர்கள் தங்கும் அறைகள், பணியாளர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது விளையாட்டு நகரம் அமையும் இடமானது, ஜேப்பியார் கல்வி குழுமத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த இடமாகும். இதன் மதிப்பு ரூ.2010 கோடி என கூறப்படுகிறது. இந்த 91.04 ஏக்கர் நிலத்தை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 18ந்தேதி அன்று திமுக அரசு மீட்ட நிலையில், அத்துடன் கூடுதலாக 14 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மொத்தம் 105 ஏக்கரில் விளாயாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது.