சென்னை
சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்,
”மிகவும் பிரசித்தி பெற்ற மகாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் வருகிற 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது. அதே போன்று, மேற்கண்ட இடங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கும் வருகிற 26-ந் தேதி(புதன்கிழமை) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in இணைதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. அதிகாரப்பூர்வ செல்போன் செயலி(ஆப்) மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்படி வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”
என அறிவித்துள்ளார்.