சென்னை

மிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

“இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம், நாளை (சனிக்கிழமை) மற்றும் 28 ஆம் தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 280 பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை) 355 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 280 பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை) 355 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகளும் இந்த இடங்களில் இருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.