சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறு கிறது. வாக்குச்சாவடிகள் அமைவிடம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க,முகவரி மாற்றம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம். இதில், 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தப் பணிகள் வருகிற 28-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க தமிழகம் முழுவதும் இன்று (16.11.2024) மற்றும் நாளை (17.11.2024) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழகம் முழுவதும் 68,000 வாக்குச்சாவடி மையங்களில் காலை முதல் மாலை வரை விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயது முடிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போது 17 வயது முடியும்போது, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
18 வயது பூர்த்தி ஆன பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு விடும். 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் கூடுதல் இடங்களில் பெயர் பதிவு இருந்தால் அதை நீக்குவது, திருத்தங்கள், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு போன்ற வசதிகளை முகாம் நடக்கும் காலங்களில் பெறலாம். அதற்கான படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கிருக்கும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அலுவலக நாட்களில் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்கலாம். www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும்’ வாக்காளர் உதவி’ கைபேசி செயலி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.