சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில், விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாய் விடுப்பு எடுத்த மாணாக்கர்கள், தங்களுக்கான பொதுத்தேர்வுகளை எழுதும் வகையில் சிறப்பு அனுமதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அரசு தேர்வுத்துறை இயக்குநரகம்.
பொதுவாக, 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணாக்கர்கள், பொதுத்தேர்வு எழுத வேண்டுமானால், அவர்களுக்கு பள்ளியில் குறிப்பிட்ட சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி விடுமுறை எடுக்கும் மாணாக்கர்கள் தேர்வெழுதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனையடுத்து இந்தாண்டுப் புதிய விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வருகைப் பதிவு குறைந்த மாணாக்கர்கள், பொதுத்தேர்வு எழுத வேண்டுமெனில், தனியாக அனுமதி கடிதம் பெற வேண்டுமென அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மொத்த பள்ளி நாட்களில் 75% குறைவாக வந்த மாணாக்கர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக சிறப்பு அனுமதி கடிதம் அனுப்பப்பட வேண்டுமென தேர்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.