சென்னை: இந்தியாவிலேயே இன்னும் குரங்கம்மை தொற்று பரவல் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய் சிகிக்சைக்கென 4 முக்கிய நகரங்களில் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
கொரோனாவுக்கு பிறகு, மீண்டும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது எம் பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய். இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்களில் குரங்கம்மை சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், சென்னை மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் குரங்கம்மை நோய் சிகிச்சைக்கென சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் குரங்கம்மை நோய்க்கான சிறப்பு சிகிச்சை வார்டை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியளார்களை சந்தித்தார்.
அப்போது, ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை நோய் இங்கும் பரவி விடாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இதுவரை யாருக்கும் இந்த தொற்று இல்லை. தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணித்து வருகிறார்கள். குரங்கம்மை அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
10 படுக்கைகளுடன் தொற்று நோயை தகுந்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளுடன் இந்த வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. உயிரிழப்புகள் கடந்த 3 ஆண்டுகளை விட குறைந்து உள்ளது. இந்த ஆண்டு தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களை கண்காணித்து வருகிறோம் என்றார்.
தமிழ்நாட்டில் குரங்கம்மைக்கென் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு இருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை நோய் யாருக்குமே கண்டுபிடிக்கப்படாத நிலையில், திடீரென அரசு சிறப்பு வார்டுகளை திறந்திருப்பது சந்தேகங்களை எழுப்புவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.