ரயில்வேவும் பெண்கள் சுடும் தோசையும்…
சிறப்பு கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்
நாம் அடிக்கடி கவிதை வடிவத்தில் சொல்வோம், ‘’ஊரெங்கும் தேடிப்பார்த்தால் எங்குமே அடிமுட்டாள்களை காணவில்லை..விசாரித்ததில் அனைவரும் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாய் போய் விட்டார்கள்’’ என்று.
உயர் அதிகாரிகளிலேயே கொஞ்சம் பகுத்துப்பார்த்தால் அவர்களில் பெரும்பாலானோர் ரயில்வே துறையில்தான் இருப்பார்கள் போல..
உலக நாடுகளில் ரயில்வே என்றால், ஒரு திட்டத்தை தீட்டி அதை நிர்ணயித்த கால அளவுக்குள் செயல் பாட்டிற்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுந்தான் நேரெதிராக காமெடி செய்துகொண்டிருப்பார்கள்.
அதாவது திட்டத்தை அறிவிப்பார்கள்..பேருக்கு கொஞ்சூண்டு நிதியை ஒதுக்குவார்கள்..திட்டம் காலாகாலத்துக்கும் நடந்துகொண்டே இருக்கும். தமிழகத்தின் ரயில்வே திட்ட லட்சணங்களை உற்று நோக்கினால் இந்த உண்மை அப்பட்டமாக புரியவரும்..
டிக்கெட்டே எடுக்காமல் பயணம் செய்யும் வட மாநிலங்களில் ரயில்வே மாய்ந்து மாய்ந்து புதுப்புது திட்டங்களை தீட்டும். ஆனால் பிளாட்ஃபாம் டிக்கெட்டைக்கூட தவறாமல் எடுக்கும் தமிழ்நாடு என்றால் ரயில்வே துறைக்கு அப்படியொரு கசப்பு.. இன்றைக்கு நேற்றல்ல..ஆதி முதலே..
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில் பாதை, சென்னை- விழுப்புரம்.- அரியலூர்- திருச்சி – திண்டுக்கல் – மதுரை- நெல்லை- கன்னியாகுமரி/ நாகர்கோவில் 739 கிலோமீட்டர் ரயில் பாதை..
விழுப்புரம்-கடலூர்-கும்பகோணம்- திருச்சி, விருத்தாச்சலம்-சேலம் திருச்சி – கரூர், திருச்சி- ராமேஸ்வரம், மதுரை- ராமேஸ்வரம், மதுரை-போடி நாயக்கனூர் உள்பட பல கிளைப்பாதைகள் இந்த சென்னை-குமரி உயிர் நாடியை நம்பியே இருக்கின்றன.
பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் போடப்பட்ட இந்த மீட்டர் கேஜ் பாதையை பிராட் கேஜ் பாதையாக மாற்றுவதற்குள்ளேயே இந்திய ரயில்வே துறைக்கு அப்படியே மாமங்கமாய் நுரை தள்ளிவிட்டது. இதற்கப்புறம் மின்மயமாக்குதல், இரட்டைப்பாதை..அப்புறம் புதிய வழித்தடங்களில் பாதை அமைப்பது..எல்லாவற்றையும் கேட்டால் தலை கிறுகிறுவென சுற்றும். முதலில் மீட்டர் கேஜ் பாதை விவகாரத்திற்கு வருவோம்.
90 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மதுரை-உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி- தேனி- போடிநாயக்கனூர் மீட்டர் கேஜ் பாதை… தினசரி அலுவலகங்கள் சென்று வரும் ஊழியர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு இந்த ரயில் போக்குவரத்து வரப்பிரசாதமாக அமைந்தது.. இன்னும் ஒருபடி மேலேபோய் சொன்னால் சரக்கு போக்குவரத்தை நம்பியிருந்த ஏலக்காய், மிளகு, பருத்தி உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் ரயில் போக்குவரத்து ஒரு வரம் என்றே சொல்லலாம்.. உதாரணத்திற்கு ஒரு பொருளை தேனி மாவட்டத்திலிருந்து குஜராத்திற்கு லாரியில் அனுப்ப 750 ரூபாய் செலவு என்றால் ரயிலில் அனுப்ப வெறும் 250 ரூபாய் மட்டுமே பிடித்துவந்தது..
இப்படிப்பட்ட ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றுகிறோம் என்று சொல்லி 2008ல் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ந்தேதி இந்த பாதையில் பயணிகள் ரயில்போக்குவரத்து விடைபெற்றது. தேனி மாவட்டத்திற்கு என இருந்த ஒரே ரயில்போக்குவரத்து இதுதான்..
அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு தங்கள் மாவட்டத்திலிருந்து நேரடி ரயில் போக்குவரத்து கிடைக்கும் என்று தேனி மக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் கனவில் மிதந்தார்கள்.. ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டும் வந்துவிட்டது.. ஆனால் பிடுங்கிபோடப்பட்ட மீட்டர் கேஜ்க்கு பிராட்கேஜ் இன்னமும் வந்தபாடில்லை.. போடுகிறார்கள்,, போடுகிறார்கள்.. போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்..
மதுரை-போடி அகலப்பாதை திட்டத்தின் மதிப்பீடு 175 கோடி. ஆனால் 2011ல் 20 கோடியும் அடுத்த ஆண்டு 15 கோடியும் மட்டுமே ஒதுக்கினார்கள். 2012ல் இன்னும் மோசம் வெறும் 5 கோடிதான்..இதை வைத்துக்கொண்டு நாக்கைத்தான் வழிக்க முடியும். 2016ம் ஆண்டே மொத்த திட்டத்தொகை 285 கோடியாக எட்டிவிட்டது. இப்போது இன்னும் கூடியிருக்கும்
தமிழ்நாட்டில் இப்போதைக்கு ரயில் போக்குவரத்து இல்லாத ஒரே மாவட்டம் தேனிதான் என்று பலரும் காறி காறித்துப்ப, கழுவிக்கழுவி ஊற்ற இந்த ஆண்டு 80 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது ரயில்வே துறை.
அப்புறம் இன்னொரு மீட்டர் கேஜ் கேவலம்..1902ல் போடப்பட்ட திருவாரூர்- அறந்தாங்கி – பட்டுக்கோட்டை- காரைக்குடி மீட்டர் கேஜ் பாதையை 110 ஆண்டுகள் கழித்து அகலப்பாதைக்காக 2012ல் பிடுங்கினார்கள்..ஆறாண்டுகள் ஆகின்றன.. இன்னும் முழுமையாக முடியவில்லை..
மதுரை- தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி -நெல்லை-நாகர்கோவில் மின்மயத்துடன் கூடிய இரட்டை அகலப்பாதைகளாக மாற்றப்போகிறோம் என்று அண்மையில் விழா நடத்தி உலகத்துக்கே தம்பட்டம் அடித்தது இந்தியன் ரயில்வேதுறை.
மதுரை-தூத்துக்குடி திட்டத்தின் மொத்த மதிப்பு 1182 கோடி, இப்போது அதற்கு ஒதுக்கியிருப்பதோ வெறும் 75 கோடி..இவர்கள் மொத்த தொகையை ஒதுக்குவதற்குள் அது இரண்டாயிரம் கோடியை எட்டிவிடும்.. நினைத்துப்பாருங்கள் திட்டம் எப்போது முடியும் என்று. இதே கதிதான் 102 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் இரட்டை அகலப்பாதை திட்டத்திற்கும் நடக்கும்..
சென்னை- நாகர்கோவில் இடையே இரட்டை அகலப்பாதை இருந்தால் எத்தனையோ ரயில்களை கூடுதலாக இயக்கமுடியும். ஐந்து கோடி மக்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.. தமிழ்நாட்டின் முதுகெலும்பாய் திகழும் முக்கிய திட்டத்திலேயே ரயில்வே இப்படி முக்கு முக்குவென முக்குகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ரயில்வே திட்டங்களும் இப்படிப்பட்ட கேவலமான வகையில்தான் நடந்துவருகின்றன. பழைய திட்டங்களை புதுப்பித்தலுக்கே இப்படி என்றால் புதிய திட்டங்களுக்கு கேட்கவா வேண்டும்?
ஆந்திராவின் நகரியிலிருந்து திண்டிவனத்திற்கு புதிய பாதை..170 கி.மீ.தூரம்.. ஆற்காடு, ஆரணி, செய்யார், வந்தவாசி போன்ற நகரங்களுக்கு முதன்முறையாக நேரடி ரயில்போக்குவரத்து வசதி கிடைக்கும். வடமாநிலங்களிலிருந்து, தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்ல இன்னுமொரு மாற்றுப்பாதை அமையும்.
498 கோடி ரூபாய் செலவில் திட்டம் என 2007 ஆகஸ்ட்டில் தொடங்கியது ரயில்வே துறை.. 11 ஆண்டுகள் ஆகிவிட்டன..திட்டச்செலவு எவ்வளவு கூடியது, எப்போது திட்டம் முடியும் என்பதெல்லாம் ரயில்வேவுக்கே வெளிச்சம்..
கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூர்- ஆவடி புதிய ரயில்பாதை திட்டம். 839 கோடி ரூபாய். ஒதுக்கியிருப்பது வெறும் 20 லட்சம்தான்.. வாலாஜாபாத்- வண்டலூர், பாதையை புதிதாக அமைத்தார்கள் என்றால் புறநகர் ரயில்களை அதிகம் இயக்கலாம். சென்னையில் வாடகை கொடுத்து சமாளிக்க முடியாமல் திண்டாடும் பல லட்சம் குடும்பங்கள் இந்த ரயில் பாதையொட்டி அமையும் புதிய புறநகர்களை நோக்கி படையெடுப்பார்கள்.
1977ல் பட்டணபிரவேசம் என ஒரு திரைப்படம் வந்தது.. அதில் சென்னை மாநகரில் வாடகை கிடைக்காமல் பழவந்தாங்கல் என்ற கிராம பகுதியை நோக்கி ஒரு குடும்பம் படையெடுப்பதாக கே.பாலசந்தர் காட்டியிருப்பார்… 41 ஆண்டுகளில் பழவந்தாங்கலின் அபரிதமான வளர்ச்சியை பாருங்கள்.. சென்னை கடற்கரை.- தாம்பரம் புறநகர் ரயில்போக்குவரத்து வசதிதான் இதற்கு காரணம்.. புறநகர் ரயிலால் தானே 60கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் செங்கல்பட்டே இன்று சென்னையாகிப்போனது..
160 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விழுப்புரத்திலிருந்தும், 210 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜோலார்பேட்டையிலிருந்தும் சென்னைக்கு தினசரி அலுவலங்களுக்கு வந்து செல்பவர்கள் ஏராளம். நிலைமை இப்படியிருக்கும்போது சென்னைக்கு அருகில் புதிய வழித்தடங்களை அமைப்பதில்கூட மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டாதது எவ்வளவு பெரிய மடத்தனம்.
திட்டங்களை செயல்படுத்துவதை பார்த்து உலக நாடுகள் பிச்சை வாங்கலாம்..அப்படியொரு அதிபுத்திசாலித்தனம்..
பத்து திட்டங்கள் அறிவிப்பார்கள். நிதியை ஒதுக்கும் லட்சணத்தில் பத்து திட்டங்களும் 15, 20 வருஷங்களுக்கு நடக்கும். இதையே பத்து திட்டங்களில் முதலில் ஒரு திட்டத்திற்கு முழுமையாக நிதி ஒதுக்கி ஓராண்டுக்குள் முடித்தால் அங்கே போக்குவரத்து ஆரம்பமாகி வருவாயை தத்துவிடும்.
இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் ஒரே ஆண்டில் முடித்தால், பத்து ஆண்டுகள் முடியும்போது. முதல் திட்டம் ஒன்பது ஆண்டுவருவாய், இரண்டாவது திட்டம் எட்டு ஆண்டு வருவாய், மூன்றவாது ஏழு ஆண்டுகள் என வருவாய் வந்திருக்கும். மக்களுக்கும் முன்கூட்டியே பயன் கிடைக்கும்..
அதாவது, வீட்டில் பெண்கள் தோசை சுட்டால் ஒவ்வொரு தோசையையும் உடனே உடனே கொண்டுவந்து சுடச்சுட பரிமாறுவார்கள். ஆனால் ரயில்வேயிடம் கொடுத்தால் பத்து தோசைகளையும் சுட்டு மொத்தமாகத்தான் அசைந்தாடியபடி எடுத்துவருவார்கள்.. அதில் எட்டுத்தோசை ஆறிப்போயிருக்கும்.. அப்படியொரு அறிவுக்களஞ்சியம், நமது இந்தியன் ரயில்வே..
அட, ஆமாம்ல.., தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு போய் வருவதற்காகவே 57 எம்பிக்கள் இருக்காங்க.. மறந்தேபோச்சு