சென்னை
தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றவர்கள் வசதிக்காக இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வேலை மற்றும் கல்வி உள்ளிட்டவற்றால் சென்னையில் வசித்து வரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காகக் கடந்த வாரம் பேருந்து, ரயில் மற்றும் விமானங்களில் புறப்பட்டுச் சென்றனர். இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் நேற்று திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இன்று அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகிறது. எனவே வெளியூர் சென்றவர்கள் நலன் கருதி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் 7 ஆயிரம் பேருந்துகளைப் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்குகிறது.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள்,
‘முதல்வரின் உத்தரவின் படி, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பொதுமக்களின் வசதிக்காகப் பிற ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், கூடுதலாக பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 975 பேருந்துகளும், சென்னையைத் தவிர்த்து இதர இடங்களுக்கு 1,395 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
நாளை தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், கூடுதலாக பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 917 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஆக மொத்தம் 3 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 300 பேருந்துகள், பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாகச் சென்னைக்கு 3 ஆயிரத்து 167 மற்றும் சென்னையைத் தவிர்த்து இதர இடங்களுக்கு 3 ஆயிரத்து 825 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பான முறையில் சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”
என்று தெரிவித்துள்ளனர்.