கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன்
கொண்டாடுவதும் காலில் போட்டு மிதிப்பதும் என் இருவகை மனநிலை பெரும்பாலும் இயல்பாய் வாழ்கிற பொதுமக்களுக்கு மட்டுமே உண்டு. சினிமாவில் வில்லன்கள் கொடூரமாய் கொல்லப்படுவதை ஆரவாரமாய் கைதட்டி ரசிப்பது இன்றுவரை தொடரத்தானே செய்கிறது.
அதனால்தான் நிஜத்திலும் ஒரு கடுமையான குற்றம் நடக்கிறபோதெல்லால், குற்றவாளியை உடனே பரலோகத்திற்கு அனுப்பிவிடவேண்டும் என்று ஆவேசத்தை சுழட்டுகிறார்கள் மக்கள்.
சமீபத்திய உதாரணம் தஷ்வந்த் என்ற குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருக்கும், தூக்கு தண்டனை. கொஞ்சம் அந்த வழக்கை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி சென்னை முகலிவாக்கத்தில் பாபு என்பவரின் மகளான ஆறு வயது சிறுமி காணாமல்போனாள். போலீசார் தேடியபோது எரிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் பிணம் கிடைத்தது..
புலனாய்வில் கிடைத்த ஒவ்வொரு தகவலையும் முடிச்சிபோட்டு பார்த்தபோது, சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞன் பக்கம் சந்தேகம் போனது..
போலீசார் கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரித்தபோது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொன்றுவிட்டு உடலை ஒரு பையில் போட்டுக்கொண்டுபோய் அனகாபுத்தூர் பக்கம் எரித்துவிட்டதாய் பதற்றமே இல்லாமல் சொன்னான் தஷ்வந்த்.
இந்த பதற்றமில்லாத தஷ்வந்த்தைதான் நீதிமன்றம் ஜாமீனில் வெளியே அனுப்பி வைக்க, அவன் பெற்ற தாயையே கொலைசெய்துவிட்டு மும்பை தப்பி ஓடி இரண்டாம் முறை தமிழத்தை அலறவைத்தான். பெரும் செலவு செய்து அவனை ஜாமினில் எடுத்த தந்தையே அரண்டுபோய்விட்டார்.
மும்பையில் தேடிப்பிடித்த தமிழக போலீசாரிடம் டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகி, கடைசியில் போலீசாருக்கே பெரிய அளவில் அதிர்ச்சி வைத்தியம் செய்தவன் மெக்கானிக்கல் எஞ்சினியரான தஷ்வந்த்.
இப்படிப்பட்டவனுக்குத்தான் நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம், சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தீர்ப்பை கேட்ட அனைவரும் சொன்ன ஒரே விஷயம். தஷ்வந்த் என்ற மிருகத்தை உடனே தூக்கில்போட வேண்டும் என்பதுதான்.
இதுபோன்ற வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடப்பதுதான் இதுவரையிலான வரலாறு என்ற நிலையில், முகலிவாக்கம் சிறுமி வழக்கு, ஓராண்டிலேயே குற்றவாளிக்கு தண்டனை என்று வந்திருக்கிறது.
குற்றம்சாட்டப்பட்டவரே குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் பலாத்காரம் மற்றும் கொலையை நீதிமன்றத்தில் நிரூபிக்க ஆதாரபூர்வமான சாட்சியங்கள், ஆவணங்கள் அவசியம் தேவை. இதில் சாட்சிகளைக்கூட மளமளவென சேர்த்துவிடலாம். ஆனால் மருத்துவரீதியான பரிசோதனை ஆவணங்களை தயாரிப்பதுதான் மிகவும் கடினமான வேலை. பலாத்காரத்திற்கு உள்ளானவர் உயிரோடு இருந்தால் அவரின் ஆடைகள் மற்றும் உடல் பரிசோதனை ஆகிவற்றின் மூலம் தடயங்களை திரட்டிவிடமுடியும்.
ஆனால் இங்கு சிறுமி விவகாரத்திலோ, பலாத்காரத்திற்கு பிறகு கொல்லப்பட்டு சடலம் எரிக்கப்பட்டிருக்கிறது. எனவே பல கடுமையான படிகளை கடந்த பிறகே, பலாத்காரம் தொடர்பாக ஆவணங்களை போலீசார் திரட்டியிருக்க முடியும்.
கடந்த பிப்ரவரி 8-ந்தேதி தஷ்வந்த்தை கைது செய்த போலீசார், ஏப்ரல் 25-ந்தேதி, அதாவது 76 வதுநாளில், ஏராளமான நேரடி ஆவணங்கள் மற்றும் சான்று ஆவணங்களோடு 300 பக்கத்திற்கு குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்தனர்.. உ.ணமையிலேயே இது மலைக்கவைக்கும் விஷயம்.
போலீசாரின் கடுமையான முயற்சிக்கு பலனாய் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்திற்கு தூக்குதண்டனை விதித்திருக்கிறது. ஆனால் அவன் தூக்கு மேடை ஏற்றப்படுவானா என்பதுதான் சந்தேகமாக உள்ளது.
காரணம், செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வழங்கியிருக்கும் தீர்ப்பும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் பழைய வரலாறுகளும் அப்படித்தான் நினைக்க வைக்கிறது.
சிறுமியை கடத்தியதற்கு 7 ஆண்டுகள், அடைத்துவைத்ததற்கு 10, தடயத்தை மறைத்ததற்காக 7, மானபங்கம் செய்ததற்கு 7 பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமிகளை பாதுகாக்கும் போஸ்கோ சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் 10 , 8-வது பிரிவின் கீழ் 5 என மொத்தம் 46 ஆண்டுகள் தஷ்வந்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை கொலை செய்ததற்கு இபிகோ 302 வது பிரிவின் கீழ் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்கார குற்றத்திற்கு பல செக்ஷன்களை கூட்டி 46 ஆண்டுகள் கொடுக்க முடிந்ததே தவிர தூக்கு தண்டனையை கொடுக்க முடியவில்லை. வெறும் பலாத்காரம் மட்டுமே நடந்திருந்தால், தூக்கு கொடுக்க வாய்ப்பில்லை.
இதனால்தான் அண்மைக்காலமாக பல மாநிலங்கள், 12 வயதுக்குற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டால் குற்றாவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்று அடுத்தடுத்து சட்டத்திருத்தம் கொண்டுவந்து சட்டசபைகளில் நிறைவேற்றி வருகின்றன.
இப்போது தஷ்வந்திற்கு கொடுக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தீர்ப்புக்கு குற்றவியல் நடைமுறை சட்டப்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டும். உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்யாத வரை தூக்கில் போட முடியாது. குற்றவாளி மேல்முறையீடே செய்யாவிட்டாலும் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு உயர்நீதிமன்ற பெஞ்ச் அதுவாகவே விசாரித்து முடிவுக்கு வருகிறவரை இதே நிலைமைதான்.
தூக்கு தண்டனைக்காக செசன்ஸ் நீதிமன்றங்கள் பார்க்கும் ‘அரிதிலும் அரிதான குற்றம்’’ என்கிற கோணத்தை உயர்நீதி மன்றங்கள் அப்படியே ஏற்குமா என்பதுதான் கேள்விக்குறியே.
விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுவனை ஒரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி பலாத்காரம் கொன்றதுடன் இன்னொரு சிறுவனையும் பலாத்காரம் செய்தான் 27 வயது செந்தில் என்பவன். அவனுக்கு ராஜபாளையம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி 29.02.2006ல் தூக்கு தண்டனை வழங்கினார். மேல்முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்றம் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
பயங்கரமான, உறைய வைக்கிற, பதற வைக்கிற, கொடூரமான என பல வார்த்தைகளை விவரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், (The offence of committing sodomy and murdering the victim cannot be termed as rarest of rare crime) அரிதிலும் அரிதான ரக குற்றமாக செந்திலின் குற்றத்தை காண முடியாது என்று சொல்லி உயர் நீதிமன்றம், தூக்கை தூக்கி தூரப்போட்டது.
உயர் நீதிமன்றத்திற்கு போகும், தூக்கு தண்டனை தீர்ப்புகளுக்கு கிடைக்கும் மறுஉருவம் இப்படித்தான் பெரும்பாலும் இருக்கிறது. இதனால், சிறுமியை பலாத்காரம் செய்துகொன்ற தஷ்வந்திற்கு என்ன கதி ஏற்படப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சிறுவர், சிறுமியர் பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு இறுதி தீர்ப்பு வேறு மாதிரியாக போவதை பார்க்கும்போது நேற்று (பிப் 19) அருணாச்சல பிரதேசத்தில் நடந்த சம்பவம்தான் கண் முன் வந்துபோகிறது.
லோஹித் மாவட்டத்தின் தேஸு நகரத்தின் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ஒரு பெரும் கும்பல், லாக்கப்பில் இருந்த 30 வயது சஞ்சய் மற்றும் 26 வயது ஜகதீசையும் வெளியே இழுத்துவந்தது. போலீசார் என்ன முயன்றும் கும்பலை கலைக்கவே முடியவில்லை.
இருவரையும் அருகிலிருந்த மார்கெட் சதுக்கத்திற்கு கொண்டுபோய் கதறக்கதற அடித்தேகொன்றனர். சடலங்களை அங்கேயே உடனே எரிக்கவும் முயன்றனர்..ஆனால் அதற்குள் போலீஸ் பட்டாளம் வந்துவிட்டது.
ஏராளமான அளவில் திரண்டு அவர்கள் வெறித்தனமாக செயல்பட்டதற்கு ஒரே காரணம் என்ன தெரியுமா?
பள்ளிக்குபோன ஐந்தரை வயது சிறுமியை தூக்கிப்போய் இருவரும் கூட்டாக பலாத்காரம் செய்து தலையை துண்டித்துக் கொன்றுவிட்டு மலைப்பகுதியில் வீசிவிட்டுப்போனார்கள் என்ற குற்றச்சாட்டுதான்..
தெய்வம் நின்று கொல்லும் என்று நம்புகிறவர்கள் ஒரு பக்கம்..அதெல்லாம் தெய்வம் நின்னும் கொல்லாது உக்காந்தும் கொல்லாது..நாமே கொன்னாத்தான் உண்டு என்று நினைக்கிறவர்கள் இன்னொரு பக்கம்.. மூன்றாவது தரப்பு, ஆயிரம் இருந்தாலும் சட்டத்தை அவரவர்கள் கையில் எடுத்துக்கொண்டால் அப்புறம் ஜனநாயகம், அரசாங்கமெல்லாம் எதற்கு என்று கேட்கிறவர்கள்
மனிதனின் வரலாற்றில் பழிக்கு பழி என்ற சீனியர் நிலைக்கு பிறகு உதயமானதுதானே சட்டத்தின்படி தண்டனை என்ற ஜுனியர் கட்டம்? ஜுனியர் சரியாக இல்லாவிட்டால் மறுபடியும் சீனியர் அங்கே என்டர் ஆகத்தானே செய்வார்…!