சென்னை:

திமுகவில் உள்ள டிடிவி ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால், ஆய்வு செய்யப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கொறடா  சபாநாயககர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹுவிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  இது தொடர்பாக  புகார் அளிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

மேலும்,  தடகள வீராங்கனை கோமதிக்கு அரசு சார்பாக நிதி அளிக்க அனுமதி கேட்கப்பட்டுள்ள தாகவும், அது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

4 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் 50 சதவீத  வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் முறையில் இணைய வழியில் தலைமைச் செயலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்படும் என்று கூறியவங.  எஞ்சிய வாக்குச் சாவடிகள் சி.சி.டி.வி மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் வியாழக் கிழமை காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.