ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில்  செலுத்தப்பட்டுள்ள ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள்  இணைக்கும் பணி இன்று நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து பல நூறு கி.மீ உயரத்தில் இரண்டு விண்கலன்களை இஸ்ரோ இன்று  இணைக்க உள்ளது.  இந்த திட்டத்தை ‘ஸ்பேஸ் டாக்கிங்’ (Space docking) என்று சொல்லுவார்கள். ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா, சீனா இதுபோன்ற சாதனைகளை  செய்துள்ள நிலையில், இந்தியாவும் தற்போது அதை செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக ஏற்கனவே விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதை இணைக்கும் முயற்சி இன்று நடைபெற உள்ளது. இது வெற்றிகரமாக செயல்படுத்தினால், ‘ஸ்பேஸ் டாக்கிங்’ (Space docking) செய்யும் 4வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும்.

இதுதொடர்பாக இஸ்ரோ கடந்த 2024ம் ஆண்டு  டிசம்பர் 30ந்தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவியது.  400 கிலோ எடை கொண்ட 2 செயற்கைகோள்களை விண்ணில் 700 கிமீ தொலைவில் நிலை நிறுத்தும் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு செயற்கைகோளும் 20 கிமீ தொலைவில் வெவ்வேறு திசைகளில் நிலை நிறுத்தபட்டது. அதன் பின்னர் அதனை இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

இந்த இணைப்பு நடவடிக்கையானது நேற்று (ஜனவரி 9)  நடைபெறும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது. ஆனால், இந்த ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்  அன்று நடைபெற இருந்த இந்த செயல்முறை தள்ளிவைக்கப்பட்டு இன்று (ஜனவரி 13ந்தேதி) நடைபெறும்   என இஸ்ரோ தகவல் தெரிவித்தது. அதனை தொடர்ந்து, தற்போது,  வெளியான தகவலின்படி, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும், 1.5 கி.மீ இடைவெளியில் செயற்கைகொள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், இன்று காலை 500 மீ தொலைவில் இந்த செயற்கைகோள் இணைப்பு நடவடிக்கை தொடரும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.