லக்னோ:
உ.பி.யில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், மாயாவதியின் காலைதொட்டு வணங்கி ஆசி பெற்றார் அகிலேஷ் மனைவி டிம்பிள். இதனால், மாயாவதி நெகிழ்ச்சியடைந்தார். அவர்கள் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய கட்சிகளாக பாஜக, காங்கிரசை புறக்கணித்துவிட்டு, மாநில கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. எலியும் பூனையுமாக பல ஆண்டு காலமாக திகழ்ந்து வந்து முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் ஏறி, கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர்.
தற்போது உ.பி. மாநிலத்தில் தற்போது அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே அதிக தொகுதிகளை கொண்ட உ.பி.யில், இதுவரை நடைபெற்ற 3 கட்ட தேர்தலின் போது பல தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், மிதமுள்ள தொகுதிகளுக்கும் தேர்தல் நடை பெற உள்ளது.
கடந்த தேர்தலின்போது, இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முறைத்துக்கொண்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தது வியப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய டிம்பிள் யாதவ், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன, எனவே தொண்டர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், மாயாவதியை யாராவது இழிவாக பேசினால் அது என்னை இழிவுபடுத்துவதாகும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு கன்னோஜ் மக்களவை எம்.பி.யாக இருந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து, அந்த தொகுதியில், அவரது மனைவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலிலும்,அதே தொகுதியில் போட்டியிட்டு, வென்று தற்போதைய எம்பி.யாக உள்ளார. அவர் மீண்டும் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், கன்னோஜ் தொகுதியில் போட்டியிடும் டிம்பிளை அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மாயாவதி வந்திருந்தார். இந்த பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் கலந்துகொண்டனர்.
பொது கூட்ட மேடையில் யாருமே எதிர்பாராதவிதமாக டிம்பிள் யாதவ், மாயாவதியின் காலைத் தொட்டு வணங்கினார். அதைப் பார்த்த பகுஜன் சமாஜ் தொண்டர்களும் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது. கூட்டத்தில் அகிலேஷ் பேசும் போது, இந்த கூட்டணிதான் நாட்டுக்கு பிரதமரை தரப் போகிறது என்றார்.
இதுகுறித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அகிலேஷ் யாதவ் தனது குடும்பத்தின் இளைய சகோதரன் என்றும், டிம்பிள் தனது மருமகள் என்றும் வாஞ்சையோடு கூறினார். இது இரு கட்சிகளின் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.