டெல்லி: தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்கும் ,  உத்தரபிரதேசம், பிகாா் மாநிலங்கள் 11 தொகுதிகளை கூடுதலாக பெறும் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

மக்களை தொகை பெருக்கத்தை முறையாக செயல்படுத்தி, மக்களை தொகை பெருக்கத்தை தடுத்த  மாநிலங்கள் தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுசிரமைப்பால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறையும் என கூறி தமிழ்நாடு அரசு தொகுதி மறுசீரமைப்பு கூடாது என கோரி வருகிறது.  இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதுகுறித்து பாதிக்கப்படும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில்,   மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு, எவையெல்லாம் பலன் பெறும் என்பதை காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் விளக்கியுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் ,  தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்று முதல் 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். அதே நேரம், உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் 10 முதல் 11 பாராளுமன்ற தொகுதிகளைக் கூடுதலாகப் பெற வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களே, தொகுதி மறுசீரமைப்பால் பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் நிலையை சந்திக்கும்.  அந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்கான தண்டனையாக இது அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தலா 8 தொகுதிகளையும், மேற்கு வங்காளம் 4, ஒடிசா 3, கா்நாடகா 2, இமாசல பிரதேசம் 1, பஞ்சாப் 1, உத்தரகாண்ட் 1 தொகுதியை இழக்க நேரிடும்.

உத்தரபிரதேசத்தில் 11, பீகாரில் 10, ராஜஸ்தானில் 6, மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகள் அதிகரிக்கும். ஜாா்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சத்தீஸ்கரில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கும். அசாம், ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரா மாநிலஙகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் இழப்போ அல்லது பலனோ இருக்காது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்பு என்பது என்ன?

ஒவ்வொரு முறை,  மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டுமென இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census) அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யப்பட வேண்டுமென்றது சட்டம்.

இப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய Delimitaion Commission என்கிற குழுவை அமைக்க வேண்டுமென்று 1952ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் கூறியது. இதற்குப் பிறகு இந்தியாவில் மூன்று முறை 1951, 1961 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது. மேற்கூறிய கணக்கெடுப்புகளின் படி இந்தியாவின் மக்கள் தொகை முறையே 36 கோடி, 43.9 கோடி, மற்றும் 54.8 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கைகளின் அடிப்படையில் 1952இல் நடந்த முதல் தேர்தலில் 494 தொகுதிகள் அமைக்கப்பட்டன. அடுத்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 522 மற்றும் 543 என்று உயர்ந்தது.

இதன்படி, இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் மறுசீரமைப்பு  செய்ய மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை 2026ம் ஆண்டு நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மக்கள் ஜனத்தொகையை கட்டுக்குள் வைத்துள்ள தமிழ்நாடு உள்பட தென்மாவட்டங்கள் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. அதாவது,  தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்படுகிறது.