சென்னை
நேற்று முதல் முன்பதிவு செய்யப்படும் ரெயில் பெட்டிகளில் பெயர் பட்டியல் ஒட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து பயணிகள் தங்களின் இடத்தை கண்டுபிடிக்க தவித்துப் போயினர்.
முன்பதிவு பெயர் பட்டியலை ரெயில் பெட்டிகளில் ஒட்டும் முறையை நிறுத்தப் போவதாக ரெயில்வே துறை அறிவித்திருந்தது. அதன் படி நேற்று சென்னை செண்டிரல், எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் முதல் நாளாக பட்டியல் ஒட்டுவதை நிறுத்தியது. இதனால் மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பலர் தங்களது இருக்கையை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர். இதனால் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பயணிகள் பலர் இது குறித்து, “முன் அறிவிப்பே இல்லாமல் பட்டியல் ஒட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட தேதியில் இருந்து என எந்த தேதியும் குறிப்பிடவில்லை. இதனால் நாங்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளோம். பலரும் இருக்கையை கண்டுபிடிக்க தவித்துள்ளோம். ஒலிபெருக்கியிலாவது அறிவித்து இருக்கலாம். ஆனால் அதையும் நிர்வாகம் செய்யவில்லை.” என தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ரெயில்வே அதிகாரிகள், “இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக இந்த முறையை ரெயில்வே அறிமுகப் படுத்தி உள்ளது. செண்டிரல், எழும்பூர் உட்பட 4 ரெயில் நிலையங்களில் இனி முன் பதிவுப் பட்டியில் ஒட்டப்பட மாட்டாது. ஆனால் நுழைவு வாயிலில் ஒட்டுவது நிறுத்தப்படவில்லை. தவிர பயணிகளில் செல்ஃபோனுக்கு முழுத்தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு எந்த சிரமமும் கிடையாது” எனக் கூறி உள்ளனர்.