சென்னை: மாநில தலைநகர் சென்னையில் 96 உள்பட மாநிலம் முழுவதும் 254 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் கிஆர் கோடு வசதியுடன், பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவ இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
கடைசி நேர பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில், முன் பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளை சுலபமாக பெற ரயில்வே, தானியங்கி விற்பனை டிக்கெட் இயந்திரங்களை நிறுவி வருகிறது. தற்போது சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றிரண்டு, டிக்கெட் விற்பனை எந்திரங்கள் ‘‘கியூ ஆர் கோடு” வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மேலும் பல ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களை நிறுவன முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு ரெயில்வேயில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் தற்போது 99 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கூடுதலாக 254 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரெயில் பயணிகள் முன் பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளை சுலபமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 ரெயில்வே கோட்டத்துக்கும் வழங்கப்பட உள்ளன. அதில் 96 எந்திரங்கள் சென்னைக்கும், 12 எந்திரங்கள் திருச்சிக்கும், 46 எந்திரங்கள் மதுரைக்கும், 50 எந்திரங்கள் திருவனந்தபுரத்துக்கும், 38 எந்திரங்கள் பாலக்காட்டுக்கும், 12 எந்திரங்கள் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கும் வழங்கப்பட உள்ளன.
மேலும் இந்தத்தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் ”கியூ ஆர் கோடு” வசதியுடன் அமைக்கப்பட உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். இதன் மூலம் பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள ‘யூ.பி.ஐ’ ஆப்கள் மூலமாக உடனுக்குடன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இது பயணிகள் மத்தியில் வரவேற்பைப்பெறும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.