திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், இதுவரை கர்நாடகாவில் கனமழைக்கு 7 பேரும், கேரளாவில் கனமழைக்கு 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மழை பெய்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், 28 மாவட்டங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு பெய்து வருகிறது, இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கி உள்ள நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. மே 24ம் தேதி முதல், கேரளாவின் பெரும்பாலான பகுதிகளிலும், கர்நாடகாவின் மங்களூர் உள்பட பல மாவட்டங்களில், தமிழ்நாட்டில் மேற்குதொடர்ச்சி பகுதிகளான கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் சூறைகாற்றுடன் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
கேரளாவில் தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம், பத்தனம்திட்டா என பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இடுக்கி, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இதையடுத்து, முன் எச்சரிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் எர்ணாகுளம் திருமராடி பகுதியில் கனமழை காரணமாக மரம் விழுந்ததில் அன்னகுட்டி சாக்கோ என்பவர் பலியானார். ஆலப்புழா அருகில் புன்னம்பரா பகுதியில் நீரில் மூழ்கி ஜேம்ஸ் என்பவர் உயிரிழந்தார். மாநிலத்தில் மொத்தம் மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக சென்றுள்ளனர்.ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர். பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு இதுவரை 7 பேர் மழைக்கு பலியாகி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 26.44 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, தட்சிண கன்னடாவில் கனமழைக்கு 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். தேரளகட்டே அருகே பெல்மா கிராமத்தில் கனகெரே பகுதியில் வீடு இடிந்து 10 வயது சிறுமி பாத்திமா இறந்துள்ளதாகவும், மேலும் உல்லால் அருகே மஞ்சநாடி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மொன்டே பதவு பகுதியில் உருமனே கோடி என்ற இடத்தில் நிலச்சரிவில் வீடு இடிந்து பிரேமா(வயது 65), அவரது மருமகள் அஸ்வினி(30), பேரன்கள் ஆர்யன்(2½), ஆருஷ்(1½) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜ்ஜிரி கிராமத்தைச் சேர்ந்த விஜேஷ் ஜெயின்(27) என்ற மின்வாரிய ஊழியர் மழையால் சரிந்து விழுந்த மின்கம்பத்தை மீண்டும் சீரமைத்த போது மின்சாரம் தாக்கி பலியானார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது..
மங்களூரு அருேக தொட்டபெங்கெரே பகுதியை சேர்ந்த யஷ்வந்த்(38), கமலாக்ஷா(32) ஆகிய 2 பேர் ஒரு சிறிய படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஆனால், அங்கு பெய்து வரும் பலத்த காற்றுடனான கனமழை காரணமாக கடலில் படகு மூழ்கி அவர்கள் 2 பேரும் பலியானார்கள். இதன்மூலம் நேற்று ஒரேநாளில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மங்களூரு டவுன் கொட்டார சவுக்கி பகுதியில் ராஜகால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மங்களூரு டவுன் கொட்டார சவுக்கி பகுதியில் ராஜகால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்களூரு டவுனில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.