சியோல்: வட கொரியா தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தென் கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா, வட கொரியா தலைவர்கள் இடையேயான சந்திப்புக்கு தென் கொரியா முக்கிய பங்கு வகித்தது.
அதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தணிந்திருந்தது. தற்போது வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்ட பலூன்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை முற்றிலும் துண்டிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இந் நிலையில், வட கொரியா தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிபர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கொரிய தீபகற்பத்தில் உறவுகள் மற்றும் நீடித்த அமைதியை எதிர்பார்க்கும் அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் வட கொரியா உடைத்தது என்று துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கிம் யூ-கியூன் கூறினார்.
இது ஏற்படுத்தக்கூடிய அனைத்து விளைவுகளுக்கும் வட கொரியாவே முழு பொறுப்பு என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.