சியோல்

சீனா மற்றும் அமெரிக்காவை முந்திக் கொண்டு முதலில் 5 ஜி இணைய சேவையை தென் கொரியா அளிக்க உள்ளது

இணைய தொழில் நுட்பத்தில் தற்போது பல நாடுகளில் 4 ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது.   இதற்கு அடுத்தபடியாக உள்ள 5 ஜி சேவையை அளிக்க சீனா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.   இந்த 5 ஜி சேவையில் இணைய வேகம் 4 ஜி சேவையை விட 20 முதல் 100 மடங்கு வரை அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தென் கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் புதிய 5 ஜி மொபைலை வெளியிட்டுள்ளது.   இந்த 5 ஜி சேவை நாளை முதல் தொடங்கலாம் என கூறப்படுகிறது.    இதன் மூலம் தென் கொரியாவில் தற்போது நலிந்து வரும் பொருளாதாரம் பெருமளவில் முன்னேற்றம் அடையும் என நம்பப்படுகிறது.

தென் கொரியாவின் புகழ்பெற்ற மொபைல் சேவை நிறுவனமான எஸ்கே டெலிகாம் நிறுவன துணை தலைவர் ரியு யங் சங், “தென் கொரிய வாடிக்கையாளர்கள் மிகவும் துரிதமான மற்றும் உயர்ந்த தரமான சேவையை விரும்புகின்றனர்.   எனவே தென் கொரிய இணைய சேவை நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளன.

முக்கியமாக இணைய தள விளையாட்டில் 5 ஜி சேவை மிக விரைவாக விளையாட வகை செய்யும் என்பதால் விளையாட்டுக்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றன.     அது மட்டுமின்றி வர்த்தகத்தில் பலரும் விரைவான பரிமாற்றத்தை விரும்புகின்றனர்.   தற்போது எங்களிடம் உள்ள2.7 கோடி பேரில் இந்த வருட முடிவுக்குள் 10 லட்சம் பேர் 5 ஜிக்கு மாறி விடுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனமான கேடி கார்ப்பரேஷன் 4 ஜியை விட 5 ஜி சேவையை மலிவான கட்டணத்தில் வழங்க உள்ளது.   அத்துடன் இந்நிறுவனம் 5 ஜி மொபைல்களை வருட தவணைகலில் வழங்கவும்  திட்டமிட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தான் தயாரித்துள்ள 5 ஜி மொபைலான காலக்சிஎஸ்10 5ஜி மொபைலை மடக்கும் வசதியுடன் அமைத்து  $2000 டாலருக்கு விற்பனை செய்ய உள்ளது.  இந்த நிறுவனத்தின் போட்டி மொபைல் நிறுவனமான எல்ஜி தனது 5 ஜி மொபைலை இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் வெளியிடுகிறது.

இந்நிலையில் அமெரிக்கா தனது 5 ஜி மொபைல் சேவையை வரும் 11 ஆம் தேதி இரு நகரங்களில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.