சியோல்
கொரோனாத் தொற்றால் உலகமே முடங்கி இருக்கும் சூழலில் தென்கொரியாவில் தக்க பாதுகாப்புடன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மூன் ஜேன் ஆட்சியை தக்க வைத்துள்ளார்.
பிரான்ஸ், இலங்கை, எத்தியோப்பியா உள்ளிட்ட 43 நாடுகள் கொரோனா அச்சத்தால் பொதுத் தேர்தலை ஒத்தி வைத்துள்ளன. ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு இடையே தென்கொரியா நாடாளுமன்றத் தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
1987 க்குப் பிறகு நாடாளுமன்றத்தில் அரிதிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக அதிபர் மூனின் ஜனநாயகக் கட்சி திகழ்கிறது.
மிகக் கட்டுக்கோப்பான சமூக விலகலுடன் நடைபெற்ற 300 இடங்களுக்கான தேர்தலில் ஆளும்கட்சி 163 இடங்கள் மற்றும் எதிர்கட்சி போட்டியிடாத 17 இடங்கள் என மொத்தம் 180 இடங்களை கைப்பற்றி உள்ளது.
வடகொரியச் சார்புடைய யுனைட்டட் கட்சியின் தே யோங் ஹோ தலைநகர் சியோலில் அமைந்துள்ள காங்னம் மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.
35 கட்சிகள் போட்டியிட்ட இத்தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கட்சி, எதிரணியான கன்சர்வேட்டிவ் கட்சி, யுனைட்டட் ஃபியுச்சர் ஆகிய மூன்று கட்சிகளிடையேதான் போட்டி நிலவியது.
கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை தழுவியுள்ள இத்தேர்தலில் யுனைட்டட் ஃபியுச்சர் கட்சி 103 இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ளது.
16 ஆண்டுகளில் இடதுசாரி ஜனநாயகக் கட்சி முதல் முறையாக அரிதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
பிப்ரவரி மாதத் தொடக்கம் வரை அதிபர் மூன் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தியே இருந்தது. ஆனால் கொரோனாத் தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியதும் அதிபர் அதனை கையாண்ட விதம் தென்கொரிய மக்களை வெகுவாகக் கவர்ந்து தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் இவ்வாறிருக்க தென்கொரியா தேர்தலை நடத்திய விதமும் உலகினரால் பெரிதும் பாராட்டப்பட்டது வருகிறது.
வேட்பாளர்கள், நான்கு பேருடன் மட்டுமே சென்று மக்களை சந்தித்தது, தேர்தலை ஒரே நாளில் அல்லாமல் பிரித்து நடத்தியது, வாக்குச்சாவடி மையங்களின் வெளியே சானிடைசர் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு, சமூக விலகலை முறையாக பின்பற்றியது என தேர்தல் நேரத்தில் தென்கொரியா கொரோனாவை வென்றதும் குறிப்பிடத்தக்கது.