டர்பன்
கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாடுகளுக்காகப் பதுக்கி வைக்க வேண்டாம் எனப் பணக்கார நாடுகளுக்குத் தென் ஆப்ரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென் ஆப்ரிக்க அதிபரான சிரில் ராமபோசா ஆப்ரிக்க நாடுகள் சம்மேளனத்தின் தலைவராக உள்ளார். ஆப்ரிக்க நாடுகளில் தென் ஆப்ரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதுவரை 14.17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இங்கு கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தடுப்பூசிக்கு உடனடி தேவை அதிக அளவில் உள்ளது.
நேற்று உலக பொருளாதார மையம் நடத்திய காணொளி கருத்தரங்கில் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராமபோசா தனது உரையில். “தற்போது உலகெங்கும் கொரோனா தடுப்பூசிகளின் தேவை மிக மிக அதிகமாக உள்ளது. பல பணக்கார நாடுகள் இந்த மருந்துகளை ஏராளமாக வாங்கி தங்கள் பயன்பாட்டுக்காகப் பதுக்கி வைத்துள்ளன.
ஒரு சில நாடுகளில் தங்களின் தேவையைப் போல் 4 மடங்குக்கு மேல் தடுப்பூசி மருந்துகள் வாங்கி பதுக்கப்பட்டுள்ளன. பணக்கார நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மற்ற நாடுகளில் போடப்படாதது உலக அளவில் பாதுகாப்பானது இல்லை. எனவே பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் பதுக்க வேண்டாம் மாறாக அவற்றை ஆப்ரிக்க உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு அளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.