சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது.
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் ‘இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவை விமான நிலையத்தில் வைத்து நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது .
இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அனுமதி பெற்று, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பாடல் வெளியீட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா பேசும் போது, “யார் என்ன கண்டுபிடித்தாலும், அது மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கவில்லை என்றால் அதற்கு அர்த்தமே இல்லை என்று கூறினார் .
இந்தப் படத்தில் சுமார் 30 நிமிடங்கள் விமானக் காட்சிகள் இருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இல்லையென்றால், அதற்குச் சாத்தியமில்லை.
இந்தக் கதையை சுதாவினால் மட்டுமே பண்ண முடிந்தது. என்னுடைய 20 வருடத் திரையுலக வாழ்வில், படப்பிடிப்பு தளத்தில் இந்தப் படம் தான் சிறந்த தருணம் என்று சொல்வேன். இந்தப் படத்துக்காக என்ன பாராட்டுக் கிடைத்தாலும், அது சுதாவையே சேரும். இது முழுக்க அவருடைய படம் தான். அவர் எனக்குச் சகோதரி என்றாலும், சிறந்த பரிசை விட முக்கியமான ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் மோகன்பாபு எனக்கு காட்பாதர் மாதிரி. அவருடன் வரும் காட்சிகள் எல்லாம் ஹைலைட்டாக இருக்கும்” என்று பேசினார் சூர்யா.