சென்னை

டாஸ்மாக் கடைகளில் இனி  உலகப் புகழ்பெற்ற சூலா ஒயின் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச் சிறந்த ஒயின்களில் சூலா ஒயினும் ஒன்றாகும்.   இந்த ஒயின் நாசிக் பகுதியில் உள்ள திராட்சை தோட்டங்களில் விளையும் ஒரு வகை சிறப்பு திராட்சையைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.   இந்த ஒயின் வகை தமிழகத்தில் இது வரை விற்பனை செய்யப்படாமல் இருந்தது.

தற்போது பொருளாதார சரிவையொட்டி விற்பனை குறைந்துள்ளதால்  சூலா ஒயின் விற்பனையை அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் தற்போது மதுபான வகைகளை டாஸ்மாக் மட்டுமே விற்பனை செய்து வருகிறது.  விரைவில் இந்த சூலா ஒயின்  டாஸ்மாக் எலைட் விற்பனை நிலையங்களிலும் குறிப்பிட்ட மதுபான கடைகளிலும் கிடைக்க உள்ளது.

இது குறித்து சூலா ஒயின்ஸ் தயாரிக்கும் சூலா வினியார்ட்ஸ் நிறுவன அதிகாரி, “நம் நாட்டில் அதிகம் மது அருந்துவோர் உள்ள தமிழகத்தில் எங்கள் சூலா ஒயினை விற்பனை செய்ய உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறோம்.  இந்த சூலா ஒயின் 6 வகைகளில் கிடைக்க உள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் மேலும் 2 வகை அறிமுகம் செய்யப்பட உள்ளது.   இந்த ஒயினின் குறைந்த பட்ச விலை ரூ.1000 ஆக இருக்கும்.  தமிழ்நாட்டில் சென்னை நகரில் ஒயின் அதிக அளவில் விரும்பி அருந்தப்படுகிறது.  அதற்கு அடுத்தபடியாக கோவை நகரில் அதிகம் பேர் ஒயின் பருகுகின்றனர். ” எனத் தெரிவித்துள்ளார்.