லாஸ் ஏஞ்சல்ஸ்,

விரைவில் ஸ்மார்ட் டிவிகளுக்கன டிவிட்டர் வீடியோ செயலி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க் டிவிட்டரைத் தன்வசப்படுத்தினார். அவர் அதன் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். அதில் ஒன்றாக உயர் பதவி வகித்த ஊழியர்கள் உள்பட பலரை பணியில் இருந்து நீக்கினார்.  மேலும் டிவிட்டருக்குக் கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர் வசதியையும் அறிமுகப்படுத்தினார்.

சமீபத்தில் டிவிட்டரில் ராபின்சன் என்ற கணக்கின் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர், ”ஸ்மார்ட் டி.வி. க்களுக்கான டிவிட்டர் வீடியோ செயலி ஒன்று உண்மையில் எங்களுக்குத் தேவையாக உள்ளது. டிவிட்டரில் ஒரு மணிநேரம் ஓடக் கூடிய வீடியோவை என்னால் காண முடியவில்லை” எனப் பதிவிட்டு உள்ளார்.

எலான் மஸ்க் இதற்குப் பதிலாக அந்த வசதி விரைவில்  வந்து விடும் எனத் தெரிவித்து உள்ளார்.

அந்த நபர்,” பாராட்டுகிறேன். யூடியூப்புக்கான சந்தாவை ரத்து செய்து விட்டு, பின்னர் ஒரு போதும் அதனைத் திரும்பிப் பார்க்காத ஒரு நாள் வரும். அதனை நான் பார்க்க முடியும்” என பதிவிட்டு உள்ளார்.