சென்னை

விரைவில் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை புதுச்சேரி வழியாகப் படகு சேவை தொடங்க உள்ளது.

மாதிரி புகைப்படம்

இதுவரை பலரும் சென்னையில் இருந்து புதுச்சேரி மற்றும் நாகப்பட்டினத்துக்குக் கிழக்கு கடற்கரைச் சாலை மூலம் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இதில் மேலும் புதுமையாக வங்காள விரிகுடா கடல் வழியே சென்னை முதல் நாகப்பட்டினம் வரை புதுச்சேரி வழியாகப் படகு சேவை தொடங்க மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் மாநிலம் தமிழகம் என்பதால் கப்பல் மற்றும் படகு போக்குவரத்தைக் கடற்கரை நகரங்களுக்கு இடையே தொடங்கும் முயற்சியில் மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.

அவ்வகையில் மத்திய அரசின் ‘சாகர் மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையே கப்பல், படகு போக்குவரத்து 5 மாதங்களில் தொடங்கப்படுவதற்கான பணிகளில் சென்னை துறைமுக அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இதற்காகத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ரோ-ரோ, ரோபேக்ஸ் கப்பல்கள் மற்றும் படகு இயக்குவது குறித்து, முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. தற்போது புதுச்சேரியில் 4 மீட்டர் ஆழத்தில் கப்பல் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது.

மேலும் கடலூர் துறைமுகத்திலும் 9 மீட்டர் ஆழம், 240 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்துமிடம் செப்டம்பர் மாதத்தில் தயாராக உள்ளது.   இந்த கப்பல் நிறுத்தும் இடத்தில் சுமார் 120 மீட்டர் நீளமுடைய இரண்டு கப்பல்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.