டில்லி
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 31 முதல் ஏப்ரல்3 வரை நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை தொடர் இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் அமர்வு பிப்ரவரி மாதம் 11 அன்று முடிந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. மீண்டும் மார்ச் 2ல் இரண்டாம் அமர்வு தொடங்கியது போது கொரோனா பரவல் நாடெங்கும் அதிகரித்தது.
ஆகவே முன் கூட்டியே அதாவது மார்ச் 23 உடன் அவை கூட்டம் முடிக்கப்பட்டது. இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன தற்போது கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. நாடாளுமன்றத்துக்கான மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை, இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,”நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கூட்டுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தற்போது கொரோனா பரவுதல் அதிகரித்து வருவதால் அதன் பாதிப்பைக் கருத்தில் கொண்டு இது குறித்து முடிவு எடுக்க உள்ளோம்”எனத் தெரிவித்துள்ளார்.